இம்பால்: மணிப்பூர் மாநில பாஜ மூத்த தலைவரின் வீடு மற்றும் காரை அடையாளம் தெரியாத நபர்கள் தீ வைத்து கொளுத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் கடந்த ஆண்டு இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் இது வன்முறையாக மாறி, மணிப்பூர் பற்றி எரிந்தது. தற்போது வன்முறைகள் குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாநில பாஜ செய்தி தொடர்பாளரின் வீட்டை நேற்று அடையாளம் தெரியாத ஒரு கும்பல் தீ வைத்து கொளுத்தியது.
அவருடைய காருக்கும் மர்ம கும்பல் தீ வைத்து கொளுத்தியுள்ளது. சுராசுராசந்த்பூர் மாவட்டம் துய்பாங் பகுதியில் உள்ள பாஜ செய்தி தொடர்பாளர் மைக்கேல் லாம்ஜாத்தங்கின் வீட்டுக்குள் புகுந்த அங்கிருந்த பொருட்களை அடித்து உடைத்து சேதப்படுத்தி வீ்ட்டுக்கு தீ வைத்தனர். அங்கு நின்றிருந்த காரையும் எரித்தனர். பாஜ தலைவரின் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியதற்கு முதல்வர் பிரேன் சிங் கண்டனம் தெரிவித்துள்ளார். மைக்கேல் லாம்ஜத்தாங்கின் வீடு ஏற்கனவே 2 முறை கலவரக்காரர்களால் தாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
* தனி நிர்வாகம் கோரி குக்கிகள் பேரணி
குக்கிகள் பற்றி மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் பேசியதாக அவதுாறாக பேசியதாக கூறப்படும் ஆடியோ வெளியாகியுள்ளது. பிரேன் சிங்கின் பேச்சை கண்டித்தும், குக்கிகள் வசிக்கும் பகுதிகளுக்கு தனி நிர்வாகம் உருவாக்க கோரி சுராசந்த்பூர்,காங்போக்பி மற்றும் டெங்னோபால் ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று குக்கிகள் அமைதி பேரணி நடத்தினர். குக்கி-ஸோ மாணவர் அமைப்பு நடத்திய பேரணியால் பல இடங்களில் கடைகள்,பள்ளிகள் அடைக்கப்பட்டிருந்தன.