திருமலை: செகந்திராபாத்- புவனேஸ்வர் இடையே செல்லும் விசாகா எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுடன் நேற்று அதிகாலை 3 மணியளவில் ஆந்திர மாநிலம், பல்நாடு மாவட்டம், பிடுகுரல்லா மண்டலத்தில் உள்ள தும்மல செருவு என்ற இடத்தில் வந்துகொண்டிருந்தது. அப்போது, மர்ம நபர்கள் திடீரென ரயிலில் ஏறி பயணிகளிடம் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடிக்க முயன்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த பயணிகள் கத்தி கூச்சலிட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் விரைந்து சென்று வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கியால் சுட்டனர். சத்தம் கேட்டதும் கொள்ளை கும்பல் கீழே குதித்து தப்பி சென்றது.
இதுகுறித்து ரயில்வே போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில், பீகார் மற்றும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த கொள்ளை கும்பல்கள் பிடுகுரல்லா அருகே ரயில்களில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு வருவதும், இந்த கும்பலில் 7 பேர் இருப்பதும் தெரியவந்தது. மேலும், கடந்த ஒரு வாரத்திற்குள் இதேபோல் ரயில்களில் 2 முறை கொள்ளை சம்பவம் நடந்துள்ளன. இந்நிலையில் நேற்று காலை 3வது முறையாக கொள்ளை முயற்சி நடந்துள்ளது ரயில் பயணிகள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளை கும்பலை தேடி வருகின்றனர்.