சென்னை: தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே ஆட்டோ கவிழ்ந்து 3 பெண்கள் உயிரிழந்தனர். தென்காசி மாவட்டம் சுரண்டை பகுதியில் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் பகுதிக்கு விவசாயப் பணிக்காக லோடு ஆட்டோவில் பலர் பயணித்துக் கொண்டிருந்தனர். விவசாய தொழிலாளர்களை ஏற்றிக்கொண்டு சென்ற ஆட்டோ சுரண்டை – வாடியூர் சாலையில் விபத்தில் சிக்கியது. வளைவில் திரும்பியபோது கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ கவிழ்ந்ததில் ஜானகி (52), வள்ளியம்மாள் (60), பிச்சி (60) உயிரிழந்தனர்.
விபத்தில் பலத்த காயமடைந்த 12 பேர் சிகிச்சைக்காக தென்காசி, ஆலங்குளம் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற்னர்.
வாழை படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் அனைவரையும் உலுக்கிய நிலையில் அதுபோன்ற ஒரு சம்பவம் தான் இன்று தென்காசியில் நடந்துள்ளது. கடந்த 2001ம் ஆண்டு, நெல்லை பகுதியில் விவசாயக் கூலி தொழிலாளர்கள் 19 பேர் பலியான நிஜ சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு மாரி செல்வராஜ் ‘வாழை’ படத்தை இயக்கியிருந்தார்.