அம்பை: தென்காசி மாவட்டம் பொட்டல்புதூரில் கடந்த செப்.4ம் தேதி பாஜ தலைவர் அண்ணாமலையின் ‘என் மண் என் மக்கள்’ நடைபயணம் நடந்த போது போலீசாரின் தடையை மீறி கூட்டமாக கூடியது, போலீசாரை பணி செய்யவிடாமல் தடுத்தது உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் ஆழ்வார்குறிச்சி போலீசார், அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்ட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கில் அம்பை நீதிமன்றத்தில் அமர்பிரசாத் ரெட்டியை ஆஜர்படுத்த சென்னை புழல் சிறையில் இருந்து போலீசார் நேற்று முன்தினம் பேருந்து மூலம் அம்பைக்கு அழைத்து வந்தனர். நேற்று பகல் 12.30 மணியளவில் அம்பை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி பல்கலைச்செல்வன் முன்பு ஆஜர்படுத்தினர். சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக நடந்த இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பல்கலைச்செல்வன், அமர்பிரசாத் ரெட்டிக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.