சென்னை: சென்னையின் அடையாளங்களில் ஒன்று கிண்டி ரேஸ் கோர்ஸ். 160 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த இடம் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் குதிரை பந்தயம் நடத்த ஏதுவாக 99 ஆண்டுகள் குத்தகை அடிப்படையில் கடந்த 1945ம் ஆண்டு வழங்கப்பட்டது. இந்த குத்தகை காலம் வரும் 2044 ஆண்டு மார்ச் 31ம் தேதி வரை உள்ளது. ஆனால் இந்த இடத்திற்கான வாடகை பாக்கியை 1970ம் ஆண்டு முதல் ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் செலுத்தவில்லை என்று தெரியவந்தது. இதையடுத்து, ரூ.730 கோடியே 86 லட்சத்தை செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. மேலும், வாடகை பாக்கியை செலுத்த தவறினால், ரேஸ் கோர்ஸ் நிர்வாகத்தை வெளியேற்றி, தமிழக அரசே நிலத்தை எடுத்து கொள்ளலாம் என்றும், அந்த நிலத்தை அரசு பொதுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் எனவும் உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்த உத்தரவுக்கு எதிராக ரேஸ் கோர்ஸ் நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், தமிழக அரசு ரேஸ் கோர்ஸ்சுக்கு விடப்பட்ட குத்தகையை ரத்து செய்து நிலத்தை எடுத்துக் கொண்டது. மேலும், நீதிமன்ற உத்தரவின்படி சீல் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு பலகையும் ரேஸ் கிளப்பில் வைக்கப்பட்டுள்ளது.
ரேஸ் கோர்ஸ் நிலத்தை தமிழக அரசு எடுத்துக் கொண்டதும், 160 ஏக்கர் நிலப்பரப்பில் மிகப்பெரிய நீர்நிலைகளை உருவாக்க வேண்டும், அதன் மூலம் பருவமழை காலங்களில் சென்னை பேரிடர்களில் இருந்து தப்பிக்க சிறந்த வழியாக இருக்கும் என்றும் சமூக ஆர்வலர்கள் அறிவுறுத்தினர். இதுமட்டுமின்றி, வேளச்சேரியில் ஏற்படும் வெள்ளப்பாதிப்பை தடுப்பது, ஆக்கிரமிப்புகளால் ஏரியின் பரப்பு பெருமளவு குறைந்திருப்பது, கழிவுநீர் கலப்பது, குப்பைகள் கொட்டுவது உள்ளிட்டவைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் பசுமை தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த தீர்ப்பாயம், வெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரியை பாதுகாக்க கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் ‘‘பசுமை பூங்கா’’ அமைக்கலாம் என பசுமை தீர்ப்பாயம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்திருந்தது.
இந்தநிலையில் கிண்டி ரேஸ் கிளப்பிடமிருந்து மீட்கப்பட்ட 118 ஏக்கரில் பசுமை பூங்கா அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பை தயார் செய்வதற்கான டெண்டரை தமிழக அரசு கோரியுள்ளது. மேலும், இந்த பூங்காவில் வண்ணமலர் படுகைகள், மலர் சுரங்கப்பாதை, தோட்டங்கள், கண்ணாடி மாளிகை, பறவைகள் இடம் மற்றும் வண்ணத்துப்பூச்சி தோட்டம் உள்ளிட்ட 25 வகையான வசதிகளுடன் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளன. கடந்தாண்டு செப்டம்பரில் ரூ.4832 கோடி மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில் தற்போது அதற்கான டெண்டரை அரசு கோரி இருப்பது குறிப்பிடத்தக்கது.