புதுடெல்லி: எடப்பாடி பழனிசாமி மீதான ரூ.4,800 கோடி டெண்டர் முறைகேட்டு வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைத்த உச்ச நீதிமன்றம், அன்றைய தினம் விரிவாக விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத் துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவிற்கு முறைகேடு நடந்த விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அனிருத்தா போஸ் மற்றும் பி.எம்.திரிவேதி ஆகியோர் அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இதுதொடர்பான வழக்கை நவம்பர் 29ம் தேதிக்கு ஒத்திவைப்பதாகவும், அன்றைய தினம் இருதரப்பிலும் விரிவாக விசாரணை நடத்தப்படும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதில் முன்னதாக இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, டெண்டர் முறைகேட்டு வழக்கை விசாரிக்க விடாமல் எடப்பாடி பழனிசாமி தடையாக இருந்தார் என தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை தரப்பில் குற்றச்சாட்டு வைத்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.