ஜம்மு: பாதை சீரமைப்பு பணிகளுக்காக அமர்நாத் யாத்திரை 23ம் தேதி முதல் தற்காலிகமதாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு காஷ்மீரின் இமயமலை பகுதியில் 3,880 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகையில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை 1ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ம் தேதி வரை 62 நாட்களுக்கு நடக்கும் என அறிவிக்கப்பட்டது. 362 பக்தர்கள் அடங்கிய புதிய குழுவினர் நேற்று 11 வாகனங்களில் பனி லிங்கத்தை தரிசிக்க பால்டால் அடிப்படை முகாமுக்கு சென்றனர்.
தற்போது வரை 4.4 லட்சத்துக்கும் அதிகமான பக்தர்கள் அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் நாளை மறுதினம் முதல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமர்நாத் யாத்திரைக்கான செய்தி தொடர்பாளர் கூறியதாவது, “பக்தர்களின் வருகை கணிசமாக குறைந்துள்ளது. மேலும், மழையால் பாதிக்கப்பட்ட சாலைகள் சீரமைப்பு பணிகள் காரணமாகவும் ஆகஸ்ட் 23 முதல் இரு தடங்களிலும் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தப்படும். நிறைவு நாளான ஆகஸ்ட் 31ம் தேதி பஹல்காம் பாதை வழியாக யாத்திரை நடைபெறும்” என்று கூறினார்.