திருப்புவனம்: மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையின்போது உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, நேற்று டிஎஸ்பி, ஏடிஎஸ்பியிடம் நீதிபதி விசாரணை செய்தார்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் காவலாளி அஜித்குமார் போலீசாரின் விசாரணையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட் மதுரை அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அஜித்குமார் கொலை தொடர்பாக விசாரணை நடத்தி வரும் 8ம் தேதி அறிக்கையை சமர்பிக்க விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட, மதுரை மாவட்ட 4வது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான்சுந்தர்லால் சுரேஷ், கடந்த 2ம் தேதி முதல் விசாரணையை தொடங்கினார். திருப்புவனம் போலீஸ் நிலையம் அருகேயுள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான ஆய்வு மாளிகை அறையில் விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 2ம் தேதி கொலையான அஜித்குமாருடன் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பாதுகாவலர்களாக பணிபுரிந்த பிரவீன்குமார், வினோத்குமார், ஆட்டோ ஓட்டுனர் அருண்குமார், பத்ரகாளியம்மன் கோயில் சிசிடிவி கண்காணிப்பு அலுவலர் சீனிவாசன், கோயில் அறநிலையத்துறை அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கிய சம்பவத்தை வீடியோவில் பதிவு செய்த முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன், கோயில் அலுவலரான பிரபு, கோயில் உதவி ஆணையரின் ஓட்டுனர் கார்த்திக் ஆகியோரிடம் விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து அஜித்குமாரின் தாயார் மாலதி, தம்பி நவீன்குமார், சித்தி ரம்யா, சரவணக்குமார், கோவில் அருகே கடை வைத்துள்ள கீர்த்தி என்ற பெண்ணிடமும் விசாரணை நடைபெற்றது. இதனிடையே 2 நாட்களாக ஏடிஎஸ்பி சுகுமாறன், திருப்புவனம் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் ஆகியோரிடமும் விசாரணை நடத்தப்பட்டு வழக்கு தொடர்பாக ஆவணங்களும் பெறப்பட்டன. மேலும் கோயிலில் இருந்த சிசிடிவி கேமராக்களின் டிவிஆர் பதிவுகள் மற்றும் திருப்புவனம் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமராக்கள் டிவிஆர் பதிவுகள் வழக்கு தொடர்பான பல்வேறு வீடியோ ஆதாரங்களுக்கான பென்டிரைவ் உள்ளிட்டவைகளும் நீதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
தொடர்ந்து 3வது நாளில் அஜித்குமாரை, காவல்துறையினர் ஆட்டோவில் ஏற்றி அனுப்பிய சம்பவத்தின்போது, இருந்த டிரைவரான அய்யனாரிடமும், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயனிடமும் விசாரணையை நடத்தினார். பின்னர் அஜித்குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை மருத்துவர்களான சதாசிவம் மற்றும் ஏஞ்சல் ஆகியோர் அஜித் குமாரின் உடற்கூராய்வு ஆய்வறிக்கை, உடலில் இருந்த காயங்கள், அஜித் குமார் உயிரிழப்பு எப்போது நடைபெற்றது என்பது குறித்தான தகவல்களை விசாரணை நீதிபதியிடம் வாக்குமூலமாக அளித்தனர்.
நான்காம் நாளான நேற்று காலை 7.50 மணிக்கு நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், திருப்புவனம் காவல் நிலையத்திற்குள் சென்றார். அங்குள்ள போலீசாரிடம் விசாரணை செய்தார். தொடர்ந்து ஏடிஎஸ்பி சுகுமாறன், இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், எஸ்ஐ சிவப்பிரகாசம், கடந்த 27ம் தேதி காவல் நிலையத்தில் இருந்த பாரா போலீஸ் இளையாராஜா, ஏடிஎஸ்பி சுகுமார், சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஎஸ்பி சண்முகசுந்தரம் ஆகியோர் நேற்று விசாரணைக்கு ஆஜராகினர். மதியம் இரண்டு மணி வரை விசாரணை நடந்தது.
* திருப்புவனம் கோர்ட்டில் விசாரணை துவங்கியது
அஜித்குமார் மரணம் சம்பவம் தொடர்பாக திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில், நீதிபதி வெங்கேடேஷ் பிரசாத்தும் விசாரணையை தொடங்கி உள்ளார். நேற்று மடப்புரம் கோயில் ஊழியர்கள் சக்தீஸ்வரன், பெரியசாமி, கண்ணன், வினோத், பிரபு, கார்த்திக் வேலு, சீனிவாசன் உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தினார். போலீசார் தாக்கியதை செல்போனில் படம் பிடித்த சக்தீஸ்வரன் விசாரணைக்கு ஆஜரானார். வரும் நாட்களில் மற்றவர்களிடமும் விசாரணை நடைபெற உள்ளது. அஜித்குமார் வழக்கில் சாட்சிகளின் உண்மைத்தன்மையை அறிய விசாரணை நடத்தப்படுவதாக கூறப்படுகிறது.