சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்ய வந்தபோது, காரில் ஒன்பதரை பவுன் தங்க நகை திருடப்பட்டதாக மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆலம்பட்டியை சேர்ந்த நிகிதா (48) போலீசில் புகார் கொடுத்தார். இதுதொடர்பாக மானாமதுரை குற்றப்பிரிவு போலீசார், விசாரித்தபோது தாக்கியதில் கோயில் காவலாளி அஜித்குமார் உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், நகை காணாமல் போனதாக புகார் அளித்த நிகிதா மீது ஏராளமான மோசடி புகார்கள் நிலுவையில் இருப்பது விசாரணையில் பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம். திருமங்கலம் ஏஎஸ்பி அலுவலகத்தில் நேற்று ஆலம்பட்டியை சேர்ந்த முருகேசன் அளித்த புகாரில், ‘எனது மகளுக்கு கடந்த 2011ல் நூலகத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ.2.50 லட்சம், ஆலம்பட்டியை சேர்ந்த முத்துக்கோடியிடம், அங்கன்வாடி மையத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ.2.50 லட்சத்தை நிகிதா வாங்கியுள்ளார்.
ஆனால், வேலை வாங்கித் தராமல், பணத்தையும் திருப்பி தராமல் மோசடி செய்துள்ளார். மேலும், நிகிதா ஆலம்பட்டியில் உள்ள தனது வீட்டை பாசில் என்பவருக்கு ரூ.70 லட்சத்துக்கு விலை பேசி, ரூ.20 லட்சம் முன்பணமாக பெற்றுக் கொண்டு ஏமாற்றியுள்ளார். இதேபோல் பச்சகோபன்பட்டியை சேர்ந்த தெய்வம், வினோத்குமார் ஆகியோரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.16 லட்சம் மோசடி, தேன்கல்பட்டியை சேர்ந்த செல்வத்திற்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.25 லட்சம் வாங்கி ஏமாற்றியதாக திருமங்கலம் ஏஎஸ்பி அலுவலகத்தில் புகார் தரப்பட்டுள்ளது.
தொடர்ந்து புகார்கள் வருவதால் பல கோடி ரூபாய் வரை நிகிதா மோசடி செய்திருக்கலாமென தெரிய வந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் விருவீடு பகுதியில் நிகிதாவிற்கு பல நூறு ஏக்கர் நிலம் இருப்பதாகவும் அவற்றை பறிமுதல் செய்து மோசடி செய்த பணத்தை திருப்பித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புகாரில் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து திருமங்கலம் போலீசார் கூறுகையில், ‘‘தற்போது புகார் கொடுத்துள்ளவர்கள் அனைவரும் கடந்த 2011ல் நிகிதா, அவரது தாய் சிவகாமி மீது திருமங்கலம் தாலுகா மற்றும் டவுன் போலீஸ் ஸ்டேஷன்களில் புகார் தந்துள்ளனர்.
இதன்பேரில் மோசடி வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. தற்போது மீண்டும் அதே புகாரை தந்தபோது, ஏற்கனவே கொடுத்த புகார் அடிப்படையில் வழக்கு நடைபெறுவதாக கூறினோம். இருப்பினும் அவர்கள் தொடர்ந்து வற்புறுத்தவே திருமங்கலம் தாலுகா இன்ஸ்பெக்டரிடம் சென்று புகார் அளிக்கும்படி அனுப்பி வைக்கப்பட்டனர்’’ என்றனர். இந்நிலையில், அடுத்தடுத்து புகார்கள் குவிவதால், திருமங்கலம் ஆலம்பட்டியில் உள்ள நிகிதா வீடு கடந்த சில தினங்களாகவே பூட்டி கிடக்கிறது. அவர் குடும்பத்தினருடன் தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது.
* மாற்றி, மாற்றிப் பேசும் நிகிதா
அஜித் இறப்பிற்கு முன்பு நிகிதா வெளியிட்டுள்ள வீடியோவில், அஜித் மட்டுமே காரை எடுத்துச் சென்று, பார்க்கிங் செய்து விட்டு, ஒரு மணி நேரம் கழித்து சாவியை கொடுத்ததாக கூறி இருந்தார். ஆனால், தற்போது வெளியிட்டுள்ள 2வது வீடியோவில், ‘அஜித் ஒருவர் மட்டும் உதவவில்லை. இன்னொரு கோயில் பணியாளரும் உதவினார்’ எனச் சொல்லி இருக்கிறார்.
முதல் வீடியோவில், ‘காரின் பின் இருக்கையில் பை இருந்தது. கோயிலில் இருந்து பாதி தூரம் சென்றுவிட்டு, உணவருந்த செல்லும்போது பை திறந்திருப்பது கண்டு சந்தேகித்து பார்த்தபோது அதிலிருந்த நகை காணாமல் போயிருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்து, காரை திருப்பிக் கொண்டு கோயில் வந்தோம்’ எனவும், 2வது வீடியோவில், ‘அம்மாவின் பை வேறு; எனது பை வேறு. எனது பையை நான் எடுத்துக் கொண்டு, அம்மாவின் பையை கட்டைப்பைக்குள் வைத்து, அவரது உடைகளால் அந்த பையை மறைத்து காரின் பின் இருக்கையில் வைத்து விட்டு வந்தோம். திரும்ப வந்து பார்க்கும்போது, கட்டைப்பையில் இருந்த துணி எல்லாம் வெளியில் கிடந்தது’ எனக் கூறியுள்ளார்.
இதேபோல், முதல் வீடியோவில் நான் கார் சாவியை அஜித்திடம் கொடுத்துவிட்டு, சாமி தரிசனத்திற்கு அம்மாவை அழைத்துச் சென்றேன் எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், 2வது வீடியோவில், ‘வீல் சேரை வேறொரு கோயில் பணியாளர் தள்ளிக்கொண்டு வந்து எனக்கு உதவி செய்தார்’ என கூறி இருகு்கிறார். முதல் வீடியோவில், ‘உணவு உண்ண செல்லும்போது பின்னிருக்கையில் இருந்த பையில் நகை இல்லாததை கவனித்ததாக கூறியவர், 2வது வீடியோவில் கோயிலிலேயே உணவு வாங்கி உணவு உண்டதாக சொல்லி இருக்கிறார். நிகிதா அந்த வீடியோவில், ‘புளியோதரை கோயிலிலேயே வாங்கி சாப்பிடும்மா என்றேன். அம்மாவிற்கு லோ சுகர் வேறு.. அங்கேயே வாங்கி உண்டோம்’ எனச் சொல்லியுள்ளார்.
இதுதவிர, முதல் வீடியோவில், அஜித்திடம் மட்டுமே கார் சாவியை கொடுத்ததாக தெரிவித்த நிகிதா, அடுத்த வீடியோவில், அந்த சாவி பலரது கைகளுக்கு போய் தனக்கு வந்ததாக தெரிவித்துள்ளார். 2வது வீடியோவில், கோயிலுக்குள் காரினை நானே பார்க் செய்கிறேன் என்றேன். ஆனால் அஜித், இல்லை மேடம். நானே நிறுத்துகிறேன் என கூறியபோது, சீருடை அணிந்திருந்ததால் கோயில் ஊழியர் என நினைத்து சாவியை கொடுத்தேன். தரிசனத்திற்கு பிறகு கோயில் பூசாரி அஜித்தை அழைத்து, அவரிடம், இவர்கள் கிளம்பப் போகிறார்கள். காரை எடுத்து வா என்றார். உடனே அவர் அங்குள்ள கம்பி கேட் அருகேயுள்ள இடத்தில் கொடுத்திருந்த சாவியை வாங்கிக் கொண்டு சென்றார் என தெரிவித்துள்ளார்.
இவ்வகையில் முதல் வீடியோவில் அஜித்திடம் மட்டுமே சாவி கொடுத்ததாக கூறி வந்தவர். கோயிலுக்குள் பலரது கைக்கு சாவி சென்றிருப்பதை நிகிதா தெரிவித்துள்ளார். இதுதவிர, நகை காணாமல் போனது தெரிந்ததும் அதன்பிறகு அவர் என்ன செய்தார் என்பதை 2வது வீடியோவில் தெரிவிக்கவில்லை.
ஒரு வீடியோவில் செயின், வளையல் என மட்டும் சொன்னவர் மற்றொரு வீடியோவில் செயின், வளையல், மோதிரம் எனச் சொல்லியுள்ளார். அதேபோல் முதல் வீடியோவில் அஜித் 500 ரூபாய் கேட்டதாக சொன்னவர், அது குறித்து 2வது வீடியோவில் எந்த விபரமும் சொல்லவில்லை. முழுக்க முழுக்க பல்வேறு தகவல்களை மறைக்கும் நோக்கிலும், முன்னுக்குப் பின் முரணான தகவல்களுடனும் இந்த வீடியோ இருப்பது நிகிதா மீதான சந்தேகத்தை மேலும் வலுக்கச் செய்து்ளளது.
* மாணவிகளையும் மனரீதியாக துன்புறுத்தல்
திண்டுக்கல்- தாடிக்கொம்பு சாலையில் அமைந்துள்ள எம்விஎம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தாவரவியல் துறையின் துறை தலைவராகவும், பேராசிரியையாகவும் நிகிதா பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 2009ம் ஆண்டு பேராசிரியை பணியில் சேர்ந்தார். பின்னர் 2011ல் பணி மாறுதலாகி வேறு கல்லூரியில் வேலை பார்த்ததாகவும், அதன்பிறகு 2021ல் மீண்டும் எம்விஎம் கல்லூரியில் பணியில் சேர்ந்து தற்போது வரை பணிபுரிந்து வருவதாகவும் தெரியவந்துள்ளது. நிகிதா மீது கடந்த ஆண்டு கல்லூரி மாணவிகள் அப்போதைய திண்டுக்கல் கலெக்டர் பூங்கொடியிடம் புகார் மனு அளித்துள்ளனர்.
மனுவில், ‘பேராசிரியர் நிகிதா எங்களை மனரீதியாக துன்புறுத்துகிறார். தொடர்ந்து எங்களை வார்த்தைகளால் கஷ்டப்படுத்துகிறார்’ என கூறப்பட்டிருந்தது. இப்புகார் மனு மீது விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய கலெக்டர் உத்தரவில், நேர்முக உதவியாளர் மதுரை கல்லூரி கல்வித்துறை இயக்குனருக்கு கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் நிகிதா, அஜித்குமார் விசாரணை மரணத்திற்கு முன்பிருந்தே கல்லூரிக்கு வரவில்லை என்றும், அவர் தொடர் விடுமுறையில் இருப்பதாகவும் கல்லூரி வட்டார தரப்பில் கூறப்படுகிறது.
* ‘அக்கவுண்ட்ல வேணாங்க…500 ரூபாய் கட்டா கொடுங்க…’
ராஜாங்கத்தின் மகன் தெய்வம் கூறியதாவது, ‘‘நான் பிஎட் கல்லூரியில் முதல்வராக பணிபுரிந்து வருகிறேன். எனது மாணவியாக இருந்தவர் நிகிதா. எனக்கு உறவினர். கடந்த 2010ல் ஒருநாள் இரவு 11.45 மணிக்கு போன் செய்து அரசு வேலையாக ஆசிரியர் பணி வாங்கி தர ஏற்பாடு செய்கிறேன் என போனில் நிகிதா கூறினார். இதையடுத்து நிகிதாவின் அப்பா ஜெயம்பெருமாளை நேரில் சந்தித்து ரூ.8 லட்சம் கொடுத்தேன். அக்கா மகனுக்கு விஏஓ வேலைக்கு ரூ.8 லட்சம் என வட்டிக்கு வாங்கி ஜெயம்பெருமாள், அவரது மனைவி சிவகாமியிடம் கொடுத்தோம். நிகிதா, அவரது அண்ணன் கவியரசு, மைத்துனர் பகத்சிங் ஆகியோரும் எங்களிடம் பணம் வாங்கினர்.
தேர்தல் வந்துவிட்டதால் வேலை வாங்க இயலவில்லை என தெரிவித்தனர். அதன்பின்பு ஆலம்பட்டி வீட்டை பூட்டிவிட்டு சென்று விட்டனர். மீண்டும் அவர்களை தேடி பார்த்த போது பணம் தரமுடியாது என என்னை விரட்டி விட்டனர். கடந்த 10 நாள்களுக்கு முன்பு நிகிதா அவரது தாய் சிவகாமியை சந்தித்து பணம் கேட்டோம். நாங்கள் சாப்பிட கூட வழியில்லை எனக்கூறி எங்களை ஏமாற்றினர். கல்லூரியில் முதல்வராக இருந்தும் மிகவும் கஷ்டத்தில் உள்ளேன். பல இடங்களில் கோடிக்கணக்கில் மோசடி செய்துள்ளனர். அனைவரிடம் 500 ரூபாய் கட்டாகவே கேட்டு வாங்கினர். இதனால் பணம் கொடுத்தற்கான ஆதாரம் இல்லை’’ என்றார்.
* பாடம் நடத்திய ‘தெய்வத்துக்கே’ விபூதி அடித்த ‘மாணவி’ நிகிதா
நிகிதாவிடம் பணம் கொடுத்து பாதிக்கப்பட்ட திருமங்கலம் அருகே பச்சகோப்பன்பட்டியை சேர்ந்த ராஜாங்கம் கூறியதாவது, ‘‘கடந்த 2010ல் என் மகன் தெய்வம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிந்தார். இவரிடம் மாணவியாக நிகிதா படித்து வந்தார். நிகிதாவின் தந்தை ஜெயம்பெருமாள், கலெக்டரின் பிஏவாக இருந்து பணி ஓய்வு பெற்றவர். தெய்வத்திற்கு அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.8 லட்சம் நிகிதா மற்றும் அவரது பெற்றோர் வாங்கியுள்ளனர். ஆனால் வேலை வாங்கித் தரவில்லை. வேலை வந்துவிடும் என கூறினர். வேலை வராத காரணத்தினால் நாங்கள் தொடர்ந்து கேட்கவே ஒருகட்டத்தில் எனது மைத்துனரிடம் பணத்தை கொடுத்து விடுகிறேன் என கூறிச் சென்ற ஜெயம்பெருமாள் அதன்பின் வரவில்லை பணமும் தரவில்லை. வேலையும் வாங்கி தரவில்லை’’ என்றார்.
* ஒன்றல்ல.. இரண்டல்ல… 4 திருமணம் முடித்தவர்: 4வது கணவர் பரபரப்பு பேட்டி
நிகிதாவின் தந்தை மாவட்ட வருவாய் துறை அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இதனால் நிகிதாவுக்கு, பார்வர்டு பிளாக் கட்சியில் இருந்து பிரிந்து அதே பெயரில் கட்சித் தொடங்கியுள்ள திருமாறன்ஜியுடன் திருமணம் நடந்துள்ளது. திருமணத்தின்போது தான் ஒரு ஐஏஎஸ் அதிகாரி என்று சொல்லித்தான் நிகிதா திருமணம் செய்துள்ளார். ஆனால் அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தவுடன் இருவருக்கும் சண்டை நடந்துள்ளது. இதனால் 28 நாளில் இருவரும் பிரிந்து விட்டனர்.
இந்தநிலையில், நிகிதாவுக்கு பல விஐபிக்களுடன் பழக்கம் ஏற்பட்டது. அவர்கள் மூலம் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார். அதில் பல ஐஏஎஸ்களையும் அவருக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது. அதோடு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொழில் அதிபரையும் தெரியும் என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் மூலம் புகாரே கொடுக்காமல்தான் இந்த அராஜகத்தை போலீசார் அரங்கேற்றியுள்ளனர்.
இந்நிலையில், தென்னிந்திய பார்வர்ட் பிளாக் தலைவர் திருமாறன் ஜி, நேற்று அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: நிகிதா எனக்கு முன் 3 பேரை திருமணம் செய்தவர். அவரின் திருமண வலையில் நானும் சிக்கியவன். நான் 4வது கணவர் என நினைக்கிறேன். ரூ.10 லட்சத்தை அவர்களிடம் என் அப்பா கொடுத்தார். அப்போதுதான் எனக்கு விவாகரத்து தந்தார்கள். அவர்களின் குடும்பமே சீட்டிங் தான்.
வேலை வாங்கி தருவதாக ஏமாற்றுவது, திருமணம் செய்து ஏமாற்றுவது, இது தான் அவர்களின் வேலை. நகை திருடியதாக கூறுவதே பொய் என நினைக்கிறேன். முதலில் நிகிதாவை கைது செய்து விசாரிக்க வேண்டும். இவ்வாறு கூறினார். மோசடி புகாருக்கு உள்ளான நிகிதாவுக்கு, இதுவரை 4 திருமணங்கள் முடிந்துள்ளன. ஆனால், யாருடனும் சேர்ந்து வாழாமல் பிரிந்து விட்டார். 4 பேரையும் விவகாரத்து செய்து விட்டதாகவும் கூறப்படுகிறது. தற்போது தனியாக தாய் சிவகாமியுடன் வசித்து வருகிறார்.
* எஸ்பிக்கே தெரியாமல் தாக்குதல்
கோயிலில், காரை நிறுத்தும்போது கார் பார்க்கிங்கிற்கு ரூ.500 வேண்டும் என்று காவலாளி கேட்டுள்ளார். ஆனால் அவர் கொடுக்க மறுத்ததால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதில் நிகிதாவை, அஜித்குமார் ஒருமையில் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனால், தனக்கு இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி நகையே தொலையாமல், நகையைக் காணவில்லை என்று பொய்யான புகாரை கொடுத்து அஜித்குமாரை தாக்க வைத்து விட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் மாவட்ட எஸ்பிக்கே தெரியாமல், இந்த சம்பவம் அரங்கேறியுள்ளதால், இதனால் முக்கியமானவராக பார்க்கப்படுவது மானாமதுரை டிஎஸ்பியைத்தான். இதனால் இந்த விவகாரத்தில் அவரிடம் விசாரணை நடத்தினால் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
* கைதான ஓரிரு நாட்களில் ரிலீஸ்
ராஜாங்கத்தின் பேரன் வினோத்குமார் கூறியதாவது, ‘‘பணம் ஏமாற்றியது தொடர்பாக திருநகரை சேர்ந்த வக்கீல் ஒருவர் எங்களிடம் பேசினார். அவர் பணம் எதுவும் தரமுடியாது முடிந்ததை செய்து கொள்ளுங்கள் என மிரட்டினார். நாங்கள் அப்போதைய எஸ்பியிடம் புகார் கொடுத்தோம். திருமங்கலம் போலீசில் புகார் கொடுத்தோம். உடனே கைது செய்தனர். ஓரிரு நாளில் வெளியே வந்துவிட்டனர். எங்களை போல் சென்னை, செக்கானூரணி, மதுரையை சேர்ந்த பலரையும் இவர்கள் ஏமாற்றியுள்ளனர். ஆனால் இதுவரையில் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றார்.
* வீடியோ எடுத்த சாட்சிக்கு துப்பாக்கி போலீஸ் பாதுகாப்பு
அஜித்குமாரை போலீசார் தாக்குவது தொடர்பான வீடியோவை, கோயில் பணியாளர் சக்தீஸ்வரன் தனது செல்போனில் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ பதிவு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. இவர், தமிழக டிஜிபிக்கு இ-மெயில் மூலம் அனுப்பியுள்ள கடிதத்தில், `கொலை வழக்கில் கைதாகியுள்ள தனிப்படை காவலர் ராஜா, ரவுடிகளிடம் தொடர்பில் உள்ளவர். ஏற்கனவே கடந்த 28ம் தேதி என்னை மிரட்டினார். அஜித்குமார் கொலை தொடர்பான ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதால் எனக்கும், என்னை சார்ந்தோருக்கும் அச்சுறுத்தல் இருக்கிறது. எனவே, காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும்’ என தெரிவித்திருந்தார்.
இதனையடுத்து சிவகங்கை மாவட்ட (பொ) எஸ்பி சந்தீஷ் உத்தரவின்பேரில், சிவகங்கை மாவட்ட ஆயுதப்படை போலீசார் ஒருவரும், உள்ளூர் போலீசார் ஒருவரும் சக்தீஸ்வரன் வீட்டு பாதுகாப்பிற்கு நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளனர். சக்தீஷ்வரன் வெளி மாவட்ட போலீசார் பாதுகாப்பு வேண்டும் என கேட்டுக் கொண்டதால், துப்பாக்கி ஏந்திய ராமநாதபுர மாவட்ட போலீசார் 2 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அஜித்குமார் தாக்கப்பட்ட இடமான அறநிலையத்துறை அலுவலகத்திற்கு 2 போலீசார் 24 மணி நேரமும் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
* நிகிதாவையும் கைது செய்ய வேண்டும்
அஜித்குமாரின் குடும்பத்தினரை நேற்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் அவர், செய்தியாளர்களிடம் கூறியதாவது: அஜித்குமார் மீது புகார் அளித்த பெண் மீதே ஏகப்பட்ட புகார்கள் வருகின்றன. அதுகுறித்து தீர விசாரிக்க வேண்டும். தவறு செய்திருந்தால் அப்பெண்ணை கைது செய்ய வேண்டும். மேலும் தனிப்படை போலீசாரை ஏவி விட்ட ஐஏஎஸ் அதிகாரி யார் என்பதையும் அரசு வெளிக்கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு கூறினார்.
* ‘கஞ்சா புகைக்க வைத்து காவலர்கள் அடித்தனர்’
அஜித்குமார் தாக்கப்பட்டதை செல்போனில் வீடியோ பதிவு செய்த சக்தீஸ்வரன் நேற்று கூறியதாவது: அஜித்குமார் தாக்கப்பட்டதிலிருந்து இதுவரை நடந்ததையெல்லாம் நீதிபதியிடம் கூறியுள்ளேன். உண்மை தகவலை காவல்துறையினரிடம் சொன்னதற்கு அவர்கள் என்னையே தவறாக சொன்னார்கள். மனிதாபிமானமே இல்லாமல் என்னையும் ஒரு சிலர் குற்றம் சாட்டுகின்றனர். அஜித்குமாரை 3 பேர் அடித்ததை நானே நேரில் பார்த்தேன். அடிக்கும்போது தண்ணீர் கேட்டு அழுதார். கஞ்சா புகைக்க வைத்து அடித்துள்ளனர். அவரது உடலில் இருந்து வந்த கஞ்சா வாடை மூலம் தெரிந்து கொண்டேன். நகை திருட்டு குறித்து அஜித்திடம் கேடடேன். அப்போது அவர் என்னால் அடி தாங்க முடியவில்லை என்றார். மாலை 6.30 மணியளவில் அஜித்குமாரை ஆட்டோவில் ஏற்றியபோது அவருக்கு உயிர் இல்லை.எனக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. இவ்வாறு கூறினார்.
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கில் முக்கிய திருப்பமாக விசாரணையின் போது அஜித்குமாருடன் உடன் இருந்த அவரது உறவினர் மகேஷ் பாபு நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘அஜித்குமாரை இந்து அறநிலையத்துறை அலுவலகம் பின்புறம் மதியம் 3 மணிக்கு விசாரித்தபோது நான் அங்கு சென்றேன். கஞ்சா பயன்படுத்தாத அஜித்குமாருக்கு போலீசார் கஞ்சா கொடுத்து சித்ரவதை செய்து விசாரணை மேற்கொண்டனர். அஜித்குமார் குடிக்க தண்ணீர் கேட்டும், கொடுக்காமல் மிளகாய் தூள் கலந்து கொடுத்தனர். மேலும், ராஜா என்ற காவலர் நெஞ்சில் கடுமையாக தாக்கியதில் அஜித்குமார் சிறுநீர், மலம் கழித்தார். சனிக்கிழமை மாலை 6.30 மணி அளவில் அவர் இறந்து விட்டார்’’ என்றார்.
* முதல்வர் நடவடிக்கை மார்க்சிஸ்ட் பாராட்டு
அஜித்குமாரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூற வந்த மார்க்சிஸ்ட் கம்யூ. மாநில செயலாளர் பெ.சண்முகம் அளித்த பேட்டியில், ‘‘குற்றம் நிகழ்ந்தது உண்மை என முதல்வர் உணர்ந்திருக்கிறார். அதனால்தான் உயர்நீதிமன்றம் சிபிசிஐடி விசாரணை என உத்தரவிட்டபோதும், ஒன்றிய அரசின் புலனாய்வுக்கு தானாக முன் வந்து உத்திரவிட்டார். முதல்வர் மு.க ஸ்டாலினின் இந்த நடவடிக்கையை மார்க்சிஸ் கட்சி வரவேற்கிறது’’ என்றார்.
* ஆணையிட்ட காவல் உயரதிகாரி யார்? அன்புமணி கேள்வி
பாமக தலைவர் அன்புமணி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: காவலர்களால் கொல்லப்பட்ட அஜித்குமார் என்ற இளைஞரை சித்ரவதை செய்யும்படி, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு கூட தகவல் தெரிவிக்காமல் காவல்துறை துணை கண்காணிப்பாளரை தொடர்பு கொண்டு காவல்துறை உயரதிகாரி ஒருவர் ஆணையிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அந்த அதிகாரி யார்? என தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
* தமாகா ரூ.1 லட்சம் நிதி
தமாகா சார்பில் நேற்று முன்னாள் எம்.பி.உடையப்பன், முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன் உள்ளிட்டோர் ஜி.கே.வாசன் சார்பில் ஆறுதல் கூறி ரூ.1 லட்சம் நிதி வழங்கினர்.
* அஜித் குமார் மயங்கி கிடந்தார்: டிரைவர்
மடப்புரம் கோயில் உதவி ஆணையரின் டிரைவர் கார்த்திக் ராஜா கூறுகையில், ‘‘நான் கடந்த 2 நாட்களாக நீதிபதி விசாரணைக்கு சென்று வருகிறேன். நடந்ததை கண்ணால் பார்த்ததை மனசாட்சிக்குட்பட்டு மறைக்காமல் நீதிபதியிடம் சொன்னேன். நான் டூட்டி முடிந்து போனபோது, கூட்டமாக இருந்தது. நான் பார்த்தபோது அஜித்குமார் மயங்கி கிடந்தார். போலீசார் உட்பட நானும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு ஏற்றி அனுப்பினோம். அப்போது மயங்கிய நிலையில்தான் அஜித் இருந்தார்,’’ என்றார்.