சென்னை: கோயில் திருவிழா இசை நிகழ்ச்சியில் நடனமாடும் போது, மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் ஏசி மெக்கானிக் அடித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மயிலாப்பூர் விசாலாட்சி தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (32), ஏசி மெக்கானிக். இவருக்கு காச நோய் இருந்ததாக கூறப்படுகிறது. மந்தைவெளி பறக்கும் ரயில் நிலையம் அருகே உள்ள துலுக்கானத்தம்மன் கோயில் திருவிழா கடந்த ஒரு வாரமாக நடந்து வருகிறது. இதையொட்டி, நேற்று முன்தினம் கோயில் நிர்வாகம் சார்பில் இசை நிகழ்ச்சி நடந்தது. இதை பார்க்க தினேஷ் மது போதையில் கோயிலுக்கு வந்துள்ளார். அங்கு, இசைக்கு ஏற்றபடி வாலிபர்கள் பலர் மது போதையில் நள்ளிரவு 1 மணி வரை நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது தினேஷூம், விசாலாட்சி தோட்டத்தை சேர்ந்த பார்த்திபனும் மது போதையில் ஒருவர் மீது ஒருவர் விழுந்தபடி நடனமாடியுள்ளனர்.
இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த பார்த்திபன், தினேஷை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் தினேஷ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த பொதுமக்கள் தினேஷை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்த போது தினேஷ் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.இதுகுறித்து தினேஷ் உறவினர்கள் அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதில், பார்த்திபன் தாக்கியதில் தான் தினேஷ் இறந்ததாக தெரிவித்து இருந்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதற்கட்டமாக தினேஷ் பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பிறகு தான் தினேஷ், பார்த்திபன் தாக்கியதில் உயிரிழந்தாரா அல்லது உடல் பலவீனமான நிலையில் அதிர்ச்சியில் உயிரிழந்தாரா என தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இருந்தாலும், போலீசார் தற்போது தினேஷ் இறப்புக்கு சந்தேக மரணம் என்று வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரேத பரிசோரனை அறிக்கைக்கு பிறகு தான் கொலை வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர். கோயில் திருவிழாவின் போது இசை நிகழ்ச்சிக்கு நடனமாடும் போது, வாலிபர் தாக்கியதில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் மந்தைவெளி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.