மதுரை: கோயில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்த நிபந்தைகளுடன் அனுமதியளித்துள்ள ஐகோர்ட் கிளை, கிராமத்திலுள்ள நீர்நிலைகளை தூர்வார ரூ.25 ஆயிரத்தை ஊராட்சியில் செலுத்த வேண்டுமென உத்தரவிட்டுள்ளது. ஐகோர்ட் மதுரை கிளைக்கு உட்பட்ட 14 மாவட்டங்களில் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள் நடத்த அனுமதி கோரி 7க்கும் மேற்பட்ட மனுக்கள் ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்கள் அனைத்தும் நீதிபதி பி.புகழேந்தி முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுக்களை விசாரித்த பின் நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: இது சமூக ஊடக காலம். இந்த சூழலில், ஆடல் பாடல் கலை நிகழ்ச்சி நடத்த அனுமதி கோரி மனு தாக்கல் செய்து உள்ளீர்கள். இந்த ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அதிக பணம் செலவு செய்யப்படுகிறது. எனவே, ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்படுகிறது. மனுதாரர்கள், ஆடல், பாடல் நிகழ்ச்சி நடைபெறும் உள்ளாட்சி அமைப்புகளின் செயலாளரிடம், ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த ரூ.25 ஆயிரத்தை வைத்து அந்தந்த கிராமத்தில் உள்ள நீர் நிலைகளை தூர்வார வேண்டும். இதனால், அந்தந்த கிராமம் செழிப்பாக இருக்கும் என கூறி அனுமதியளித்து நீதிபதி உத்தரவிட்டார்.