மதுரை: கோயிலுக்கு நன்கொடை அளிப்பவரை அங்கீகரிக்க வேண்டுமா என்பது குறித்து, அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம், கண்டனூரைச் சேர்ந்த சின்னையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: எங்கள் கிராமத்திலுள்ள செல்லாயி அம்மன் கோயில் குடமுழுக்கு மற்றும் திருவிழாக்களில் தனிநபர்களுக்கு முதல் மரியாதை வழங்கவில்லை என்பதை உறுதி செய்யுமாறு உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: கோயில் நிர்வாகம் மற்றும் திருவிழா தொடர்பானவற்றில் தலையிட விரும்பவில்லை. அதே நேரம் கோயிலுக்கு தனது தரப்பில் நிதியுதவியை நன்கொடையாக கொடுப்பவருக்கு கோயில் சார்பில் அவரை அங்கீகரிக்க வேண்டுமா, இல்லையா என்பது குறித்து, அறநிலையத்துறை தரப்பில் பதிலளிக்க வேண்டுமென உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 21க்கு தள்ளி வைத்தார்.