பில்வாரா: ராஜஸ்தானில் ஒரு கோயில் வாசலில் மாட்டு வால் கிடந்ததை தொடர்ந்து வன்முறை வெடித்தது. கற்கள் வீசி தாக்குல் நடத்தப்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் பில்வாரா மாவட்டம் பவானிநகர் பகுதியில் உள்ள ஒரு கோயில் வாசலில் நேற்று முன்தினம் மாட்டு வால் கண்டெடுக்கப்பட்டது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அங்கு ஏராளமான பக்தர்கள் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். அவர்களிடம் அமைதிகாக்கும்படி போலீசார் வேண்டுகோள் விடுத்தனர். மாலை 5 மணிக்குள் குற்றவாளிகளை கைது செய்யாவிட்டால் திங்கட்கிழமை போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்து கலைந்தனர்.
நேற்று காலையில் ஏராளமான மக்கள் பவானிநகர் பகுதியில் திரண்டு போராட்டம் நடத்தினார்கள். கடைகள் அடைக்கப்பட்டன. இதுபற்றி அறிந்ததும் பா.ஜ எம்பி தாமோதர் அகர்வால் மற்றும் கோயில் உறுப்பினர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர். அங்கு கூடும்படி வாட்ஸ்அப் மூலம் செய்தி பரவியதால் அந்த பகுதியில் ஆயிரக்கணக்கானோர் திரண்டனர். அவர்கள் குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யும்படி கோஷம் எழுப்பினர். அப்போது போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. பல இடங்களில் கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. தொடர் வன்முறையில் ஈடுபட்டவர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர்.