காஞ்சிபுரம்: கோயில் நகரம், பட்டு நகரம் என பெயர் பெற்ற காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குடிநீர் வசதியின்றி பயணிகள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே, கோடை காலம் துவங்குவதற்கு முன்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். முக்தி தரும் தலங்கள் ஏழில் முதன்மையாக கருதப்படுவது காஞ்சிபுரம் மாநகரம். கோயில்களின் நகரம், பட்டு நகரம் என்று பல்வேறு சிறப்புகளை பெற்ற காஞ்சிபுரத்திற்கு தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். சுற்று வட்டாரப் பகுதிகளான தாமல், பாலுசெட்டிசத்திரம், பரந்தூர், வேடல், ராஜகுளம், வாலாஜாபாத், தூசி, மாமண்டூர், வெம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்களும் பல்வேறு வேலைகளுக்காக காஞ்சிபுரம் வருகின்றனர்.
அதுமட்டுமின்றி வெளியூர், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இதற்காக, காஞ்சிபுரத்தில் இருந்து சென்னை, மதுரை, திருச்சி, புதுச்சேரி, தஞ்சாவூர், திருவண்ணாமலை, சேலம், வேலூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், ஆந்திரா மற்றும் கர்நாடகா உள்ளிட்ட பல வெளி மாநிலங்களுக்கும் காஞ்சிபுரத்தில் இருந்து தினமும் சுமார் 400க்கும் மேற்பட்ட அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், மாநகராட்சி சார்பில் பேருந்து நிலைய உட்பகுதியில் 40க்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
மேலும், தற்காலிக கடைகள் மூலம் தினசரி வசூல் நடைபெறுகிறது. அத்துடன் டூவீலர் நிறுத்துமிடம் என பலவித வருவாய் மாநகராட்சி சார்பில் வசூல் செய்யப்படுகிறது. அதே வேளையில், பயணிகளுக்கான அடிப்படையான தேவையான குடிதண்ணீருக்கான ஏற்பாட்டைக்கூட செய்யாமல் புறக்கணித்து வருகிறது. பேருந்து நிலையத்தை ஒட்டி பல லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி மூலம், காஞ்சிபுரம் நகரின் பல்வேறு பகுதிகளுக்கும் தண்ணீர் சப்ளை செய்யப்படுகிறது. ஆனால், அருகில் உள்ள பேருந்து நிலையத்தில் குடிக்க தண்ணீர் இல்லாமல் பயணிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் குடிக்க தண்ணீர் வேண்டுமென்றால், கடைகளில் 20 அல்லது 25 ரூபாய் கொடுத்துதான் குடிநீர் வாங்க முடியும். கொளுத்தும் வெயிலில் வாடும் பொதுமக்களுக்கு குடிநீர் கூட மாநகராட்சி சார்பில் வழங்கப்படவில்லை. பயணிகள் வசதிக்காக பேருந்து நிலையத்தில் தனியார் மூலம் அமைக்கப்பட்ட குடிநீர் தொட்டி, மாநகராட்சி நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வந்தது. இத்தொட்டியில் குழாய்கள் மூலம் குளிர்ந்த குடிநீர் இலவசமாக வழங்கப்பட்டது. மாநகராட்சி நிர்வாகம் சரியாக பராமரிக்காததால், அந்த குடிநீர்த்தொட்டி மூலம் குடிநீர் வழங்குவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் செய்யாறு, புதுச்சேரி பேருந்துகள் நிற்கும் பகுதியில் அமைக்கப்பட்ட குடிதண்ணீர் குழாய் அறை உட்பட அனைத்தும் சேதம் அடைந்துள்ளது. இதனால், கோடை காலம் தொடங்கும் முன்னரே வெயிலின் தாக்கம் அதிகரிக்கத் தொடங்கி உள்ள நிலையில், காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் பயணிகள் குடி நீருக்காக பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பயணிகளின் தாகம் தீர்க்க உடனடி நடவடிக்கை எடுத்து, பேருந்து நிலையத்துக்குள் குடிநீர்த் தொட்டி அமைத்து பராமரிக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.