சென்னை: பழனியில் நடைபெறும் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆழ்வார்ப்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் உள்ள தனது முகாம் அலுவலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து மாநாட்டு நிகழ்வுகள் தொடங்கி நடைபெற உள்ளன.’உலக பைந்தமிழர்களை இணைத்து முருகன் மாநாட்டை நடத்துவது மகிழ்ச்சி’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே சமூக வலைத்தளத்தில் பதிவு வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக இந்து சமய அறநிலைத்துறை சார்பில் திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அனைத்து உலக முத்தமிழ் முருகன் மாநாடு இன்றும் நாளையும் என 2 நாட்கள் நடைபெறுகிறது. மாநாடு பழனியில் உள்ள பழனியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லூரியில் நடைபெறுகிறது. மாநாட்டில் காணொளி காட்சி மூலம் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். அவர் பேசியதாவது; ஒவ்வொருவருக்கும் ஒரு நம்பிக்கை இருக்கும்; அவற்றுக்கு திராவிட மாடல் அரசு தடையாக இருந்ததில்லை. திமுகவின் தாய்க்கட்சியான நீதிக்கட்சி ஆட்சியில்தான் இந்து கோயில் பாதுகாப்பு சட்டம் இயற்றம். கோயில் வளர்ச்சி, அதில் பணிபுரிவோரின் முன்னேற்றத்திற்கு திராவிட மாடல் துணை நிற்கிறது. திடீரென மாநாடு நடத்தவில்லை; பல திருப்பணிகளை திமுக அரசு செய்து முடித்துள்ளது. ஆலய வழிபாடுகளில் தமிழ் மொழி முதன்மை பெற வேண்டும் எனவும் அவர் பேசியுள்ளார்.
இந்த மாநாட்டில் 300க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள், பிரதிநிதிகள், நீதிபதிகள், ஆதீனங்கள் உள்ளிட்டோரும் பங்கேற்கின்றனர். மேலும் இந்த மாநாட்டில் தமிழ் கடவுள் முருகனின் வழிபாட்டு சிறப்பு, இலக்கிய சிறப்பு குறித்து கருத்துரங்கங்கள் நடைபெருகிறது. அத்துடன் முருகனின் புகழ் குறித்த 1,300 ஆய்வு கட்டுரைகள் அழகன் முருகன், பாதயாத்தரையும் முருகனும், நவபாஷாணத்தில் முருகன், அறுபடை வீடுகளில் அவதரித்த முருகன், தமிழும் முருகனும் உட்பட பல்வேறு தலைப்புகளில் வெளியிடப்படுகின்றன். மாநாட்டு மலர் வெளியிடுதல் நிகழ்ச்சியும், முருகனின் புகழ் தொண்டு ஆற்றிய16 பேருக்கு ஒரு பவுன் தங்கக் காசு மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.