சென்னை: நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ. 38 கோடி மதிப்பீட்டிலான சொத்து மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை வெளிட்டுள்ள அறிக்கை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தலின்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி நேற்று நாகப்பட்டினம் காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலுக்கு சொந்தமான ரூ.38 கோடி மதிப்பிலான இடம் மீட்கப்பட்டது. கோயிலுக்கு சொந்தமான 1,63,773 சதுரடி பரப்பிலான காலி மனை தனியார் பள்ளி ஒன்றிற்கு வாடகைக்கு விடப்பட்டிருந்தது. இப்பள்ளி நிர்வாகம் நீண்ட காலமாக வாடகை செலுத்தாமல் நிலுவை வைத்திருந்ததால் காவல்துறை மற்றும் வருவாய்துறை அலுவலர்களின் உதவியுடன் மீட்கப்பட்டு கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.38 கோடி. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.