Thursday, June 19, 2025
Home ஆன்மிகம் பெரிய புராணம் அருளிய பெருமானுக்கு ஒரு கோயில்

பெரிய புராணம் அருளிய பெருமானுக்கு ஒரு கோயில்

by Porselvi

சேக்கிழார் நாயனார் குருபூஜை – 31.5.2025

குன்றத்தூர் – சேக்கிழார் கோயில்

திருத்தொண்டர் புராணம் எனும் பெரிய புராணத்தைத் தமிழ்த் தேசியக் காப்பியம் என்று சொல்லலாம். பெரிய புராணம் எல்லாத் துறைகளிலும் தலைசிறந்த நூல். மூன்றாம் நூற்றாண்டு முதல் ஒன்பதாம் நூற்றாண்டு வரை தமிழகத்தினுடைய தலைசிறந்த வரலாறு. நிலையுர்ந்த பண்பாடு. தெருள் நிறைந்த அருளியல், பொருள் பொதிந்த அரசியல் மற்றும் தமிழ் மக்களின் அறிவாற்றல் மிக்க திறமையைக் காட்டும் தொழில் முறை ஆகிய எல்லாவற்றையும் எடுத்தியம் பும் தமிழிலக்கிய வரலாற்றுச் சமயநூல்.

சேக்கிழார் பெருமான் அருளிச் செய்த ‘‘பெரிய புராணம்’’ ஆறு அல்லது ஏழு நூற்றாண்டுகளுக்குத் தமிழக வரலாற்றை நமக்கு எடுத்துக் கூறுகின்ற நூல், இது ஒன்றுதான். இப்போது நம் தமிழகத்தில் நாம் பிற மாநிலங்கள் மற்றும் அயல்நாட்டு வரலாறுகளைப் படிக்கிறோம். தமிழக வரலாற்றுக்காகச் சிலப்பதிகாரம் போன்ற நூல்களைப் படித்தாலும் கூட, அதைவிடச் சிறப்பாக, ஆறு ஏழு நூற்றாண்டுகளுக்கு வரலாறாகவும் அரசியல் நூல் போலவும், தமிழ்ச் சமுதாயத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் காட்டும் பண்பாட்டு நூலாகவும், தொன்மை மிக்க பெருங்கருணைத் திறத்தையும் விளக்கும் அருளியல் நூலாகவும் விளங்குகின்ற ஒரு பெருங்காப்பியமே பெரியபுராணம்.

இத்தகைய பெருமை வாய்ந்த பெருமானுக்கு குன்றத்தூர் எனும் திருத்தலத்தில் அழகிய கோயில் அமைந்துள்ளது.அநபாய சோழ மன்னனின் அமைச்சராக இருந்த அருண்மொழி ராமதேவர் என்ற சிவ பக்தர் குன்றத்தூரில் பிறந்தார்- இவர் தன் குலத்தின் பெயரால் சேக்கிழார் எனப்பட்டார். கும்பகோணம் அருகிலுள்ள திருநாகேஸ்வரம் இறைவன் நாகேஸ்வரரின் பக்தரான சேக்கிழார், அந்தக் கோயிலின் வடிவமைப்பிலேயே குன்றத்தூரிலும் ஒரு கோயில் கட்டினார். பின்னர், குன்றத்தூரில் சேக்கிழார் பிறந்த இல்லமே அவருடைய கோயிலாகச் செய்யப்பட்டுள்ளது. காலப்போக்கில் பழுதடைந்துவிட்ட அந்தக் கோயிலைப் பெரியோர்கள் பலர் பெருமுயற்சி எடுத்துச் செப்பனிட்டார்கள்.

அக்கால கட்டத்தில் திருத்தக்க தேவர் என்னும் சமணப் பெரியார் சீவக சிந்தாமணி என்னும் பெருங்காப்பியத்தைத் தமிழில் படைத்தார். ஆசிரியரின் தவ வலிமையாலும் அருந்தமிழ் புலமையாலும் சீவக சிந்தாமணிக்குத் தமிழகத்தில் நல்ல செல்வாக்கு ஏற்பட்டு வந்தது. இதனால் தளர்ந்து போய் இருந்த சமண சமயம் மீண்டும், தலையெடுத்து வாய்ப்பு பெற்று விடுமோவென்று சைவப் பெருமக்கள் அஞ்சினர். சோழப் பேரரசரான அநபாயனும் சீவக சிந்தாமணிக் காப்பியத்தால் கவரப்பட்டான். அந்தக் கவர்ச்சியிலிருந்து அநபாயனை மீட்கும் பொருட்டாகவே சேக்கிழார் பெருமான் திருத்தொண்டர் புராணத்தைப் பாடியருளினார். திருத்தொண்டர் புராணத்திற்குப் ‘பெரிய புராணம்’ என்று மற்றொரு பெயரும் உண்டு.

தில்லையில் இருந்து கொண்டு தான் பெரிய புராணத்தை பாடும் பணியில் சேக்கிழார் ஈடுபட்டார். புராணம் சிறப்பாக அமைய வேண்டுமே என்னும் கவலையால் தில்லை அம்பல வாணரின் அருளை வேண்டிச் சேக்கிழார் பிரார்த்தித்தார். அப்பொழுது ‘உலகெலாம்’ என்ற மெய்மொழியைத் தில்லை அம்பலவாணர் சேக்கிழாருக்கு அசரீரியாக ஒலித்து அருள அதையே முதல் சொல்லாக வைத்துச் சேக்கிழார் பெருமான் காப்புச் செய்யுள் படைத்தார்.

அச்செய்யுள்-
‘‘உலகெலாம் உணர்ந் தோதற் கரியவன்
நிலவு லாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியின் அம்பலத் தாடுவான்
மலர்சி லம்படி வாழ்த்தி வணங்குவாம்!’’

இறைவன் எடுத்துக் கொடுத்த முதல் அடியை வைத்துத் திருத்தொண்டர் புராணத்தை சேக்கிழார் இயற்றினார்.

இளங்கோவடிகளின் வாரிசாகத் தோன்றி தமிழ் இனத்தாரை ஒருமைப் படுத்தும் குறிக்கோளுடன் திருத்தொண்டர் புராணத்தைப் படைத்த சேக்கிழார், அந்தப் பணிக்குப் பின்னர் சோழப் பேரரசின் முதல் மந்திரி பதவியைத் துறந்தார். திருத்தொண்டர் புராணத்தில் தாம் கூறியுள்ள செந்நெறிகளையெல்லாம் தமிழருடைய சிந்தையிலே புகுத்தி ஒருமைப்பாடு உயிர்ப்பாடும் உடைய தமிழினத்தைப் படைக்கப் பாடுபடுவதற்கென்றே அவர் பதவி துறந்தார். தமிழ்நாடு முழுவதிலும் பயணம் செய்து, நால் வருண வேறுபாடுகளையும், சாதிப் பாகுபாடுகளையும் கடந்த ஒருமைப் பாட்டுணர்வைத் தமிழர்களிடையே உருவாக்கத் தொண்டு புரிந்தார். அவரது பணியைப் பாராட்டும் வகையிலே அவருக்குத் ‘‘தொண்டர் சீர் பரவுவார்’’ என்னும் சிறப்புப் பெயரை அநபாய சோழன் அளித்தான்.

இன ஒருமைப் பாட்டைச் சாதிப்பதற்கு என்றே அவதரித்த அந்த மகாகவி சேக்கிழாரை, தீந்தமிழ் நாட்டின் தேசியக் கவியை மாமன்னனான அநபாய சோழன் அவரைச் சிறப்பித்து அக்காவியத்தை அரங்கேற்றம் செய்ததோடு, அக்கவியை அநபாயன் யானை மீதேற்றி வைத்து ஊர்வலம் செய்தான். அந்த நேரத்தில் மக்கள் எல்லோரும் காணும்படியாக யானை மீது சேக்கிழாரின் அருகிலமர்ந்து வெண் சாமரம் வீசினான். இந்த நிகழ்ச்சியானது அந்நாளைய அரசர்கள் தமிழ் மொழியிடத்தும், அம்மொழியில் புலமை பெற்றவர்களிடத்தும், தமிழ் இனத்தின் ஒருமைப்பாட்டுக்குப் பாடுபடுபவர்களிடத்தும், எத்தகைய மதிப்பு வைத்திருந்தார்கள் என்பதைப் புலப்படுத்துகிறது.

சேக்கிழார் பெருமான் குன்றத்தூரில் அமைந்துள்ள அழகிய திருக்கோயிலில் மூலவராகத் திருச்சந்நதி கொண்டு அருள்புரிகிறார். வலது கரத்தில் அட்சரமாலையுடன் அபயஹஸ்தராகவும், இடது கரத்தில் ஓலைச் சுவடியை ஏந்தியவாறு நின்ற கோலத்தில் கம்பீரமாகக் காட்சியளிக்கிறார். சோழ மன்னரிடம் முதல் அமைச்சராகப் பணியாற்றியவராதலால், விசேஷ காலங்களில் அமைச்சருக்குரிய ஆடை அணிமணிகள் அணிந்தும் அலங்காரம் மற்றும் விசேஷ பூஜைகளும் செய்விக்கிறார்கள்.

குழந்தைகள் கல்வியில் சிறக்க, இவரது சந்நதியில் நெய் தீபம் ஏற்றி வழிபடுகிறார்கள். மாசி மாதம் 17ம் தேதியிலிருந்து 5 நாட்கள் சேக்கிழார் மீது சூரிய ஒளி விழுகிறது. அதைச் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள். கோயில் பிராகாரத்தில் ‘‘திருத்தொண்டர் புராண வரலாறு’’ என்னும் செய்யுள் இலக்கியத்தைப் படைத்த உமாபதி சிவாச்சாரியார் என்ற அடியாரும், அநபாய சோழ மன்னனும் சிலை வடிவில் காட்சி தருகிறார்.

வைகாசி பூசத்தில் குன்றத்தூர் திருக்கோயிலில் சேக்கிழார் பெருமானுக்கு குருபூஜை 11 நாட்கள் நடைபெறுகிறது. இவ்விழாவின் மூன்றாம் நாளில் சேக்கிழார் மந்திரி அலங்காரத்தில் புறப்பாடாவார். மறுநாள் இங்கிருந்து திருநாகேஸ்வரம் அருள்மிகு நாகேஸ்வரர் கோயிலுக்கு எழுந்தருள, அங்கு இவருக்கு சிவபூஜை செய்யும் வைபவம் நடைபெறும். இந்த நிகழ்ச்சியின்போது சேக்கிழார் பெருமானுடன், நடராஜர், முருகப் பெருமான் ஆகியோர் வீதியுலா செல்கிறார்கள். பத்தாம் நாளில் சேக்கிழார் பெருமான் இறைவனும் ஐக்கியமான வைபவம் நடக்கிறது. ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தன்று இவருக்கு விசேஷ பூஜையும் நடைபெறுகிறது.

சேக்கிழாருக்கு 200 ஆண்டுகள் கழித்துப் பிறந்த உமாபதி சிவாச்சாரியார் என்னும் சிவனடியார் ‘திருத்தொண்டர் புராண வரலாறு’ என்னும் செய்யுள் இலக்கியத்தைப் படைத்ததோடு சேக்கிழார் பெருமானைப் பலவாறு புகழ்ந்தும் பாடியுள்ளார்.பெரியபுராணம் அருளிய சேக்கிழாரின் அரும் பணியைப் போற்றி உமாபதி சிவாச்சாரியார் போற்றிப்பாடிய பாடல் இது-

‘‘தில்லை வாழ் அந்தணரே முதலாகச் சீர்படைத்த
தொல்லையதாம் திருத்தொண்டத் தொகையடியார் பதம் போற்றி
ஒல்லையவர் புராண கதை உலகறிய
விரித்துறைத்த
செல்வ மலி குன்றத்தூர்ச் சேக்கிழார்
அடி போற்றி!’’
– என்று பாராட்டியும்,

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையவர்கள் ‘‘சேக்கிழார் பிள்ளைத்தமிழ்’’ என்று 103-செய்யுட்கள் உடைய அருமையான நூலை இயற்றி சேக்கிழாருக்குப் பெருமை சேர்த்துள்ளார். இதிபோல் பாட்டுடைத் தலைவராக சேக்கிழார் வரலாறு, அநபாய சோழனின் ஆட்சி, தொண்டைநாட்டு வளம் ஆகியவற்றைப் பற்றி விரிவாகப் பாடியுள்ளார்.

அமைவிடம்: குன்றத்தூர் சேக்கிழார் பெருமான் திருக்கோயில் சென்னை தாம் பரத்தில் இருந்து 16-கிலோ மீட்டர் தூரத்திலும், பல்லாவரத்தில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது. பாரிமுனை பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து வசதி உண்டு.திருக்கோயில் திறப்பு நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல்6 மணி வரை. பிற நேரங்களில் தரிசிக்க வேண்டுமானால் முன்னரே தொலைபேசியில் தொடர்புகொள்ளலாம். தொ.எண். 044-24780436.

வடிவேல்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi