கராச்சி: பாகிஸ்தானின் கராச்சியிலிருந்து 185 கிமீ தொலைவில் உள்ள மூசா கட்டியன் மாவட்டத்தின் தந்தோ ஜாம் நகரில் 100 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலுக்கு சொந்தமான 6 ஏக்கர் நிலத்தை சிலர் ஆக்கிரமித்து, கட்டுமானப் பணிகளை தொடங்கியிருப்பதாக இந்துக்கள் குற்றம்சாட்டி உள்ளனர். இந்நிலையில், சட்டவிரோத கட்டுமானத்தை நிறுத்தவும், கோயில் நிலத்தை மீட்கவும் வலியுறுத்தி, பாகிஸ்தான் தலித் இத்தேஹாத் அமைப்பின் சார்பில் நேற்று போராட்டம் நடந்தது.
நகரத்தின் பல்வேறு இடங்களில் உள்ளிருப்பு போராட்டங்கள் நடந்தன. தந்தோ ஜாம் பத்திரிகையாளர் மன்றத்தின் முன்பாக ஆர்ப்பாட்டத்துடன் போராட்டம் முடிவடைந்தது. இது குறித்து போராட்டத்தில் பங்கேற்ற இந்து சமூக தலைவர்கள் கூறுகையில், ‘‘கோயிலை சுற்றியிருக்கும் நிலத்தை ஆக்கிரமித்து கட்டுமானத்தை தொடங்கி உள்ளனர். கோயிலுக்கும் செல்லும் வழித்தடங்களையும் ஆக்கிரமிப்பாளர்கள் தடுத்துள்ளதால் வாராந்திர பிரார்த்தனை செய்வதும் கடினமாக உள்ளது ’’ என்றனர்.