பரிகாரங்கள் பலன் செய்யுமா என்ற கேள்வி எப்பொழுதும் கேட்கப்படுகிறது. எந்த பாவகத்தின் செயல்பட வேண்டுமோ, அந்த பாவகம் அல்லது காரகம் தொடர்பாக தேவதைகளை வழிபடும் போது, அந்த தேவதைகள் அக்காரியத்தை செய்வதற்கான அனுக்கிரகம் செய்கின்றன. இறையால் படைக்கப்பட்ட கிரகங்களால்தான்; இறைத் தொடர்புடன் இருக்கிறது.இறையோடு இயக்கத்தை பற்றிக் கொள்வதே எளிமையான வாழ்வியல் வெற்றியாகும்.
மூவரால் பாடல் பெற்ற தலம்
பிரளயம் வேண்டாத பிரம்ம தேவர் சிவபெருமானிடம் தன்னுடைய கோரிக்கையை வைத்து யாகம் செய்தார். அந்த யாகத்தின் பலனாக சிவபெருமான் பிரளயத்தினை நிகழ்த்தாமல் செய்தார். இக்காரணத்தால் இவ்விடம் பிரளயத்தினை விலகச் செய்ததால் (பிரளயத்தினை ஒற்ற செய்தல்) திருவொற்றியூர் என்று அழைக்கப்படுகிறது.இத்தலம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய முவராலும் பாடல் பெற்ற தலமாக உள்ளது. இத்தலத்தில் உள்ள இறைவனான ஆதிபுரீஸ்வரர் ஒரு சுயம்பாக வந்த புற்று லிங்கம். கார்த்திகை மாதம் பௌர்ணமி அன்று மட்டும் வெள்ளிக்கவசம் இன்றி இவரை தரிசிக்கலாம். அன்று இவருக்கு புனுகு சாம்பிராணியும் தைல அபிேஷகம் நடைபெறும்.கம்பர் வால்மீகி ராமாயணத்தை இரவில் எழுதும் பொழுது இங்குள்ள வட்டப்பாறை அம்பாளை பார்த்து “ஒற்றியூர் காக்க உறைகின்ற காளியே நந்தாது எழுதுவதற்கு நள்ளிரவில் பிந்தாமல் பந்தம்பிடி” என வேண்டிக் கொள்ளவே காளி இரவில் தீபந்தம் பிடித்து ராமாயணம் எழுத உதவினார் எனச் சொல்லப்படுகிறது. இங்குள்ள தாயார் திரிபுர சுந்தரி சமேத ஆதிபுரீஸ்வரருக்கு சூரியன், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் நாமாகரணம் செய்துள்ளன.
முகம் பார்க்கும் கண்ணாடி
ஜாதகத்தில் சூரியன் – சனி இணைவுள்ளவர்கள் அனுஷம் நட்சத்திரத்தன்று முகம் பார்க்கும் கண்ணாடி வைத்து வழிபட்டு வீட்டிற்கு எடுத்துச் சென்றால் பல பிரச்னைகள் முடிவுக்கு வரும்.மிருகசீரிஷ நட்சத்திரத்தன்று அறுகம்புல் மாலையும், தேங்காய் எண்ணெயும் நல்லெண்ெணயும் தீபத்திற்கு சுவாமிக்கு கொடுத்து வழிபட்டு பின்பு கருப்புநிற பசுவிற்கு உணவு தானம் செய்தால் வழக்குகளிலிருந்து உடனடி தீர்வு உண்டாகும். ரிஷபத்தில் சனி-கேது இணைவு உள்ளவர்கள் புனர்பூசம் நட்சத்திரத்தில் இத்தலத்திற்கு சென்று சாம்பிராணி கொடுத்து வழிபட்டு வெளியே வரும் பொழுது உணவு தானம் தந்தால் திருமணத்தடை விலகும்.களத்திர ஸ்தானம் (7ம்) பாவகத்தில் சனி அமையப்பெற்றவர்கள் பூசம் நட்சத்திரத்தன்று நீலநிற சங்குப்பூவில் மாலை தொடுத்து சுவாமிக்கு திருமண வரம் வேண்டி அர்ச்சனை செய்தால் திருமணம் விரைவில் கைகூடும். புத்திரபாக்கியத்திற்கு வேண்டுதல் செய்வோர் இங்கு வந்து மாம்பழம் வைத்து வழிபட்டு பின்பு நீங்கள் எடுத்து கொண்டு மீதியை கோயிலில் தானம் செய்தால் புத்திரபாக்கியம் கைகூடும்.
எப்படிச் செல்வது?
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 10 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது. பேருந்து வசதிகள் உள்ளன. திருவொற்றியூர் ரயில் நிலையத்திலிருந்து 1 கி.மீ தொலைவில் இக்கோயில் உள்ளது.