வேதாரண்யம்: நாகை மாவட்டம் வேதாரண்யம் அடுத்த ஆறுகாட்டுத்துறையில் 1,000க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த மீனவ கிராமத்தில் 60 விசைப்படகுகள், 500க்கும் மேற்பட்ட பைபர் படகுகள் உள்ளன. இங்குள்ள மீனவர்கள் தினம்தோறும் வங்களா விரிகுடா, பாக் ஜலசந்தியில் மீன் பிடிக்க சென்று வருகின்றனர்.
வங்களா விரிகுடாவும், பாக்ஜலசந்தியும் சந்திக்கும் இடமான கோடியக்காடு பகுதியில் உள்ள சேர்வராயன் கோயிலில் மீன் வளம் வேண்டி கொண்டு மீனவர்கள் மீன் பிடிக்க செல்வது வழக்கம். மேலும் இந்த கோயிலை தங்களது காவல் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர். இக்கோயிலில் ஆண்டுதோறும் மீனவர்கள் கிடா வெட்டி பூஜை செய்வர்.
அதன்படி கோடியக்காட்டில் உள்ள சேர்வராயன் கோயிலில் கிடா வெட்டு நிகழ்ச்சி நேற்று நடந்தது. ஆறுக்காட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் ஒன்று சேர்ந்து 51 கிடா வெட்டி சமைத்து சுவாமிக்கு பூஜை செய்தனர். பின்னர் மீனவர்களுக்கு கறி விருந்து அளிக்கப்பட்டது.