மதுரை: நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று மதுரையில் அளித்த பேட்டி: கமல் பேசியதற்கு எதற்கு எதிர்க்கிறார்கள்? கேஜிஎப் 1, 2ம் பாகங்களை நாங்கள் தொந்தரவு செய்தோமா? எங்கள் மாண்பை பார்க்க வேண்டும். தமிழில் இருந்து கன்னடம் வந்தது என்று சொல்வதையே எதிர்க்கும் மனநிலை கொண்டு இருக்கிறார்கள். கன்னட மொழி ஆய்வறிஞர்கள் கன்னடம் தோன்றிய வரலாற்றை சொல்லுங்கள். அவர்கள் பிரச்னை செய்ய வேண்டும் என்பதற்காக செய்கிறார்கள்.
தகப்பன் போல அன்பு வைத்திருந்த தலைவர் ராமதாஸ். அவருக்கு இவ்வளவு வருத்தம் இருக்கிறது என்பது அவர் பேசுகையில்தான் தெரிகிறது. இது ஆறிவிடும் காயம். இருவரும் அருகருகே அமர்ந்து பேசி தீர்க்கும் சூழல் இல்லாததால் பொதுவெளியில் பேசுகின்றனர். ராமதாஸ் மனதில் இருந்ததை கொட்டி விட்டார். எனவே ஆறிவிடும். இவர்கள் சண்டையால் நாட்டு மக்களுக்கு என்ன இழப்பு? விலைவாசி ஏதும் ஏறி விட்டதா? இது சரியாகவேண்டிய பிரச்னை தான்.
ஒன்றிய அரசு கீழடியில் முழுமையான ஆய்வை மேற்கொள்ளாமல் ஒப்புக்கு ஆய்வு செய்தனர். ஆனால், ஆய்வில் கிடைத்த பொருட்களையும் பெங்களூருக்கு கொண்டு சென்று வைத்து விட்டனர். தமிழர்களுக்கு பெருமை தருவதை அவர்களால் ஏற்க முடியாது. விஜய்யை எதிர்த்து போட்டியிடுவதற்கா நான் கட்சி ஆரம்பித்து நடத்துகிறேன்.
உலக அரசியல் வரலாற்றில் இவ்வளவு தோல்விகளுக்கு பிறகும் ஒரு கட்சி தனித்து போட்டியிடுகிறது என்றால் அது நாம் தமிழர் கட்சி மட்டும் தான். விஜய் அரசியல் வருகையால் நாதக வாக்கு சிதறாது. கோயில் மாடு மாதிரி என்னை தனியாக விடுங்கள். இவ்வாறு அவர் கூறினார்.