நத்தம்: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே உலுப்பக்குடியில் ஹிரிக்ஷி இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் கோயில் காளை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது. உடல்நலக்குறைவால் இந்த காளை நேற்று திடீரென இறந்துவிட்டது. இதனையடுத்து ஊர் மத்தியில் உள்ள மந்தையில் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் காளையின் உடல் வைக்கப்பட்டது. அங்கு காளைக்கு சந்தனம், ஜவ்வாது பூசியும், மாலைகள், வேஷ்டி, துண்டுகள் அணிவித்தும் கிராம மக்கள் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து மேளதாளம் முழங்க, வாணவேடிக்கையுடன் காளையின் உடலை ஊர்வலமாக எடுத்து சென்று அடக்கம் செய்யப்பட்டது. இந்த காளை அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் கொசவபட்டி, தவசிமடை உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் நடந்த ஜல்லிகட்டு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம், வெள்ளி காசுகளையும், பல்வேறு பரிசு பொருட்களையும் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. கோயில் காளை இறந்ததால், அப்பகுதியே சோகத்தில் மூழ்கியது.