Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Tafe
search-icon-img
Advertisement

கோயில் நில மோசடி வழக்கில் அரசு உயர் அதிகாரி கைது

புதுச்சேரி: காமாட்சி அம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசு உயர் அதிகாரியை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி காமாட்சி அம்மன் கோயிலுக்கு சொந்தமான 64,035 சதுர அடி நிலம் ரெயின்போ நகர் 7வது குறுக்கு தெருவில் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.50 கோடி இருக்கும். இந்த கோயில் நிலத்தை, போலி ஆவணம் தயாரித்து சிலர் அபகரித்து விற்றதாக கடந்த 2010ல் கோயில் நிர்வாகத்தினர் புகார் கூறினர். இதையடுத்து சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரணை நடத்தப்பட்டது.

இதில் 31,204 சதுர அடி நிலத்தை சென்னையை சேர்ந்த ரத்தினவேல், அவரது மனைவி மோகனசுந்தரி, மனோகரன், புதுச்சேரியை சேர்ந்த சின்னராசு மற்றும் சிலர் போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்து மனைகளாக பிரித்து விற்றது தெரியவந்தது. இதையடுத்து விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு, சார் பதிவாளர் சிவசாமி, அப்போதைய மாவட்ட பதிவாளர் ரமேஷ், பட்டா மாற்றம் செய்த தாசில்தார் பாலாஜி உள்பட 17 பேரை கைது செய்தனர்.

இதற்கிடையே, நிலம் பத்திரப்பதிவு தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், கோயில் நிலத்தை மனைப்பிரிவாக மாற்றி பதிவு செய்துள்ள பத்திரங்களை ரத்து செய்யவும், மனை வாங்கியுள்ள அனைவரின் கிரய பத்திரத்தையும் ரத்து செய்து, சொத்தை கோயிலுக்கு ஒப்படைக்கவும், சிபிசிஐடி போலீசார் உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யவும் உத்தரவிட்டார். இதையடுத்து கோயில் நிலத்தை வீட்டு மனைகளாக்கி விற்ற பத்திரம் ரத்து செய்யப்பட்டு, நிலம் மீட்கப்பட்டு, 2023ல் கோயில் அறக்கட்டளையிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில் காமாட்சியம்மன் கோயில் நில மோசடி வழக்கில் புதுச்சேரி அரசின் முக்கிய அதிகாரியும், முன்னாள் உழவர்கரை ஆணையரும், சார் பதிவாளருமான தற்போதைய செய்தி மற்றும் விளம்பரத்துறையின் இயக்குனருமான சுரேஷை நேற்று இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென கைது செய்தனர்.

பின்னர், முத்தியால்பேட்டை லஞ்ச ஒழிப்பு காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து, அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். சார் பதிவாளராக பணிபுரிந்தபோது அவர், காமாட்சியம்மன் கோயில் நில விற்பனையில் போலி ஆவணங்களை சரிவர ஆய்வு செய்யாமல் மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. பின்னர் அவரை நள்ளிரவில் நீதிபதி முன்பு போலீசார் ஆஜர்படுத்தினர். அப்போது சுரேஷ்ராஜன் தரப்பில் இல்ல சுப நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக ஜாமீனில் விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். இதையடுத்து அவர் பாண்டு பத்திரம் மூலம் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.