மதுரை : வணிக நடவடிக்கைகளுக்கான இடம் கோயில் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் பிரசாதம் தொடர்பான அறிவிப்பாணையை ரத்து செய்யக் கோரி வைத்தியநாதன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். வைஷ்ணவ சம்பிரதாயத்தை சார்ந்தவர்கள் மட்டும் ஏலத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பாணையை எதிர்த்து இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது. மேலும் பிரசாதக் கடைகளில் உள்ள உணவுப் பொருட்கள் பெரும்பாலும் கடவுளுக்கு படைக்கப்படுவதில்லை என்றும் மனுதாரர் குற்றம் சாட்டி உள்ளார்.
இந்த மனு மீது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில்,”கோயில்களில் தனியார் பிரசாதம் வழங்க அறநிலையத்துறை ஏன் அனுமதிக்கிறது?. கடைகளை தனியாருக்கு குத்தகைக்கு விடும் நிர்வாகம், பிரசாதத்தின் தரத்தை எப்படி உறுதி செய்கிறது என தெரியவில்லை.வணிக நடவடிக்கைகளுக்கான இடம் கோயில் அல்ல என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது. பிரசாதம் வழங்குவதை வணிக நோக்கிலான நடவடிக்கை அல்ல என்கிறது அறநிலையத் துறை. அப்படி என்றால் தனியாருக்கு பதில் அறநிலையத்துறையே தரமான முறையில் பிரசாதங்களை தயாரித்து பக்தர்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யலாம். கோயில் நிர்வாகமே தயாரித்து வழங்க முன்வர வேண்டும்.பிரசாதத்தை தயாரித்து வழங்குவதால் கோயில் நிர்வாகத்தின் வருவாயும் அதிகரிக்கும்,”இவ்வாறு தெரிவித்து வழக்கை ஒத்திவைத்தனர்.