சென்னை: தெலுங்கு மக்கள் குறித்து சர்ச்சையாக பேசிய நடிகை கஸ்தூரிக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. நடிகை கஸ்தூரி உடனடியாக மன்னிப்பு கேட்க வேண்டும் என மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். பிராமணர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தி சென்னை எழும்பூரில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நடிகை கஸ்தூரி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தெலுங்கு பேசுபவர்கள் எல்லாம் இன்னைக்கு வந்து தமிழர்கள் என… அப்படி சொல்லும்போது, எப்போதோ வந்த பிராமணர்களை தமிழர்கள் இல்லை என்று சொல்வதற்கு நீங்க யார்ங்க தமிழர்கள்.
அதனால்தான் உங்களால் தமிழர்கள் முன்னேற்ற கழகம் என வைக்க முடியவில்லை. திராவிடர் என்ற ஒரு சொல்லை கண்டுபிடித்து..\\” எனப் பேசினார். அமரன் படத்தில் மேஜர் முகுந்தன் சாதிப் பெயர் குறித்து ஏன் குறிப்பிடவில்லை.. அய்யர், அய்யங்கார் என்று சொன்னாலும் ஒன்றுதான். எப்போழுதுமே மரணம் இல்லாத நேர்மைக்கு அமரன் என்றாலும் ஒன்றுதான். அவங்க அதை தவிர்க்க நினைத்தாலும் அப்படித்தான் பெயர் வைக்க முடியும். சாதியை சொல்லாமல் அவர்கள் படம் எடுக்கிறார்களாம். ரொம்ப சந்தோசம். அப்போ… மத்த எல்லா இடங்களிலும் சொல்லாமல் இருக்கனும்ல… மதத்தை சொல்லாம இருக்கனும்ல.. அப்படி இருக்க முடியாதே… போகிற இடத்தில் எல்லாம் நானும் நாடார் பொண்ணுதான் என்று சொல்லி வாக்கு வாங்க முடியாதுன்னு… காஷ்மீர் பண்டிட்களுக்கு எதிராக நடைபெற்றது மட்டும் இனப்படுகொலை கிடையாது. அவர்கள் மொத்தமாக வெட்டினார்கள். உயிருக்கு பயந்து ஓடினார்கள். தமிழ்நாட்டில் எத்தனையோ வருடம், எத்தனையோ பத்தாண்டாக 60 ஆண்டுகளுக்கு மேல் நடப்பதற்கு பெயரும் இனப்படுகொலைதான். ஒருவனின் உணர்வை அழிப்பதும், அடையாளத்தை அழிப்பதும் அந்த இனத்தை அளிப்பதற்கு சமம்தான். இவ்வாறு அவர் பேசினார்.
கஸ்தூரியின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றனர். இதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு மொழி பேசுபவர்கள் குறித்து நடிகை கஸ்தூரி கூறிய சர்ச்சை கருத்துக்கு தமிழக பாஜக மேலிட இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாஜகவின் சுதாகர் ரெட்டி தெலுங்கிலேயே பேசி கஸ்தூரிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சுதாகர் ரெட்டி கூறுகையில், தமிழர், தெலுங்கர் அனைவரும் அண்ணன், தம்பியாக பழகிக்கொண்டிருக்கின்றனர். முன்பு சென்னை மாகாணத்துடன் தான் தெலுங்கு பேசும் பகுதிகளும் இணைந்து இருந்தன. தெலுங்கு பேசும் மக்களை பற்றி அவதூறாக பேசியதற்காக நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்க வேண்டும். தெலுங்கு பேசும் மக்களை இழிவாக பேசிய அவதூறு கருத்துக்களை நடிகை கஸ்தூரி திரும்ப பெற வேண்டும்.
பிராமணர் சங்க கூட்டத்தில் தெலுங்கு மக்கள் பற்றி கஸ்தூரி பேசியது ஏன்? தமிழர்களை பற்றி உயர்வாக பேச வேண்டும் என்பதற்காக தெலுங்கு மக்கள் பற்றி அவதூறாக பேசியுள்ளார். கஸ்தூரியின் இந்த பேச்சை வன்மையாக கண்டிக்கிறேன்” என்று தெரிவித்தார். மேலும் அவர் பாஜகவில் இல்லை என்றும் சுதாகர் ரெட்டி தெரிவித்துள்ளார். ஆனால், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற பெயரில் யாத்திரை வந்தபோது சென்னை கொளத்தூரில் அண்ணாமலையுடன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் கஸ்தூரி. ஆனால் இன்று ஆந்திராவில் கஸ்தூரி பேச்சால் கடும் எதிர்ப்பு எழுந்ததும் சுதாகர் ரெட்டி கண்டனம் தெரிவிப்பதோடு அவர் கட்சியிலேயே இல்லை என்று கூறியுள்ளார்.