அமராவதி: ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்குதேசம் கட்சியின் 3 நாள் வருடாந்திர மாநாடு கடப்பாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. 2வது நாளான நேற்று, கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இருக்க வேண்டும். 2024ம் ஆண்டு பெற்ற பெரும்பான்மையை விட 2029ம் ஆண்டு மிகப்பெரிய வெற்றியை பெறுவது உங்கள் பொறுப்பு. அதற்கான ஒப்புதலையும், மகிழ்ச்சியையும் நீங்கள் தர வேண்டும். சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்க முடிவு செய்திருக்கும் ஒன்றிய அரசை பாராட்டுகிறேன். அப்படி கணக்கெடுப்பு எடுக்கப்பட்டால், குறிப்பிட்ட சாதியினரின் எண்ணிக்கை தெரிய வரும். அதனடிப்படையில் அவர்களது நிதி நிலைமையை கண்டறிந்து அவர்களுக்காக சிறப்பு பொதுக்கொள்கையை உருவாக்க முடியும்.
மக்கள் தொகை நிர்வாகத்தில் கவனம் செலுத்த வேண்டும். மக்கள் தொகையை அதிகரிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மாநாட்டில் வெளியிடப்பட்ட தீர்மானங்கள் தெலுங்கு மக்களின் எதிர்காலத்தை வடிவமைக்கும். இதன் மூலம், 2047ம் ஆண்டுக்குள் தெலுங்கு சமூகத்தை உலகில் முதலிடத்திற்கு கொண்டு வருவதற்கான ஒற்றை இலக்கோடு பாடுபட வேண்டும். நீண்ட கால முன்னேற்றத்துக்கான 45 ஆண்டு கால வரைபடத்தை நாங்கள் வகுத்துள்ளோம். தெலுங்கு மண்ணில் மீண்டும் பிறவி எடுத்து தெலுங்கு மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்.