திருமலை: ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் லிங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் நரசிம்மம். இவர் தனது கிராமத்தில் தெலுங்குதேசம் கட்சியின் தலைவராக இருந்தார். இவருக்கு சொந்தமாக பல ஏக்கரில் எலுமிச்சை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் பிரம்மய்யா என்பவர் பல ஆண்டுகளாக காவலாளியாக வேலை செய்து வந்தார். இந்நிலையில் ஜம்பலாவரிபாலம் பகுதியில் நரசிம்மத்தை சில தினங்களுக்கு முன் பிரம்மய்யா கத்தியால் குத்திக்கொலை செய்துள்ளார். பின்னர் அவரது சடலத்தை துண்டு துண்டாக வெட்டி கடந்த 2 நாட்களாக சிறிது சிறிதாக கொண்டு வந்து அங்குள்ள கிணற்றில் வீசி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று முன்தினமும் அதேபோல் கிணற்றில் வீசியபோது, அங்குள்ளவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் விரைந்து வந்த போலீசார் கிணற்றில் இருந்த சடலத்தின் பாகங்களை மீட்டனர். பின்னர் நரசிம்மாவின் குடும்பத்தினர் கொடுத்த புகாரின்பேரில் பிரம்மய்யா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.