ஹைதராபாத்: மலையாள திரையுலகம் போல தெலுங்கு திரையுலகிலும் பாலியல் புகார்கள் தொடர்பான துணைக்குழுவின் அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர். மலையாள திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து ஹேமா ஆணையம் ஆய்வு நடத்தி வெளியிட்டுள்ள அறிக்கை, மலையாள திரைத்துறை மற்றும் அரசியலிலும் பெரும் புயலை கிளப்பியுள்ளது.
அடுத்த அடுத்த புகார்களால் ஒட்டுமொத்த திரையுலகமே அதிர்ச்சியில் உள்ள நிலையில், தெலுங்கு சினிமா துறையிலும் இதுபோன்ற விசாரணையை நடத்த வேண்டும் என நடிகை சமந்தா கோரிக்கை விடுத்திருக்கிறார். தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெலுங்கு திரையுலகை சேர்ந்த நடிகைகளில் ஒருவராக ஹேமா கமிட்டியின் அறிக்கை மற்றும் அதற்காக தொடர்ந்து குரல் கொடுத்த கேரளாவின் Women in Cinema Collective அமைப்பை பாராட்டுவதாக சமந்தா தெரிவித்து இருக்கிறார்.
அவர்களை போல 2019ம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் The Voice of Women என்ற அமைப்பு தொடங்கப்பட்டதை குறிப்பிட்டுள்ள சமந்தா பாலியல் தொந்தரவு குறித்து அந்த குழு சமர்ப்பித்த அறிக்கையை தெலுங்கானா அரசு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதனால் தெலுங்கு திரையுலகில் உள்ள பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்கவும், அதற்கான கொள்கைகளை வகுக்கவும் உதவியாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார். நாக அர்ஜுனாவின் மனைவியும், நடிகையுமான அமலாவும் இதனை வலியுறுத்தி இருக்கிறார்.