Monday, April 15, 2024
Home » ஆதரவாளருக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் மாஜி மந்திரி மீது கடுப்பில் இருக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

ஆதரவாளருக்கு சீட் கேட்டு அடம்பிடிக்கும் மாஜி மந்திரி மீது கடுப்பில் இருக்கும் சேலம்காரர் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘புரோக்கர்களின் பிடியில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் சிக்கியிருக்காமே..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘மிஸ்டர் பத்தூர் மாவட்டத்துல பிரியாணி ஊருக்கு அருகே சுகர் ஆலைக்கு பக்கத்தில் போக்குவரத்து ஆய்வாளர் அலுவலகம் செயல்படுது. இந்த அலுவலகத்துல புரோக்கர்ஸ் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகமாகிட்டே போறதா புகார்கள் இருக்குது. அங்கு உள்ள புரோக்கர்கள் அதிகாரிங்க பெயரை சொல்லி வாகன பதிவு மற்றும் இதர போக்குவரத்து பணிகளுக்கு வருபவர்களிடம் தயங்காம வசூல் வேட்டையில இறங்கிடுறாங்களாம். பணம் கொண்டு வரலைன்னா பரவாயில்லை. இந்த நம்பருக்கு ஜி பே பண்ணுன்னு கலெக்‌ஷன் பண்றதுல கறாரா இருக்கிறாங்களாம்.

அதிகாரிங்க யாராவது இதுபற்றி கேட்டாலும் ‘சார் வேலை முடியுதுனு அவங்க தான் சந்தோஷத்துல அள்ளி கொடுத்தாங்க… உங்களுக்காக தான் வாங்கினேன்’ என சொல்லி தங்கள் வேலையை சாதிச்சுடுறதா அந்த அலுவலகத்துல இருந்து வெளியே தகவல் கசியுதாம். இதுக்கு முற்றுப்புள்ளியே கிடையாதான்னு புலம்பும் பிரியாணி ஊர்க்காரங்க சிலர் மூலம் விஜிலென்சுக்கும் காத்து வாக்குல தகவல் போயிருக்குதாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘2 கட்சிக்கும் மாங்கனி தொகுதிய தர மறுத்துட்டாராமே இலைக்கட்சி தலைவரு..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘நாடாளுமன்ற தேர்தலுக்கு, இலைக்கட்சியோட முக்கிய நிர்வாகிகள் மாம்பழம், முரசு கட்சியோடு ரகசியமா கூட்டணி பேசிக்கிட்டு வர்றாங்க. இதில எத்தனை சீட், எந்ெதந்த தொகுதி கேட்கலாமுன்னு 2 கட்சிகளோட முக்கிய நிர்வாகிங்க, ஆலோசனை பண்ணிட்டு இருக்காங்க. இதுல மாங்கனி மாவட்ட தொகுதிய, தங்களுக்கு தான் ஒதுக்கணும்னு மாம்பழம், முரசு ரெண்டுமே கேட்டதாம். ஆனா இலைக்கட்சி விவிஐபியோ, மாங்கனி மாவட்டத்தை தவிர, வேறு எந்த தொகுதியை கேட்டாலும் கொடுத்துடலாம் அப்டின்னு நெத்தியடியா சொல்லிட்டாராம். இதனால மாம்பழம், முரசு கட்சி நிர்வாகிகளுக்கு ரொம்பவே ஏமாற்றமாம்.

ஆனாலும், மத்த எந்த தொகுதிய வேணும்னாலும் தர்றதா இலைக்கட்சி தலைவரு சொன்னதால, எந்ெதந்த தொகுதியை கேட்கலாம்னு, தீவிரமா ஆலோசனை நடத்திட்டு இருக்காங்களாம். எது எப்படியோ, இந்த 2 கட்சியும் மலராத கட்சியோட கூட்டு சேராம தடுக்கறது தான், நம்ம தலைவரோட திட்டம் அப்டின்னு அடிப்பொடிகள் சிலாகிச்சி பேசிட்டு இருக்காங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.‘தேர்தலில் தனது ஆதரவாளரை நிறுத்த காய் நகர்த்தி வரும் மாஜி அமைச்சர் மீது சேலத்துக்காரர் அதிருப்தியில் இருக்காராமே’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘இலை – தாமரை இடையே நடந்த உச்சகட்ட பனிப்போருக்கு பிறகு இரண்டும் தனித்தனியாக பிரிந்தது. அன்றில் இருந்தே இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வாராங்க. ஆனா, டெல்டா மாவட்டத்தில் உள்ள இலை கட்சி மாஜி அமைச்சர்கள் மட்டும் தாமரைக்கு எதிராக எந்தவித விமர்சனமும் செய்யாமல் சைலண்ட் மோடில் இருந்து வருகிறார்களாம். நாடாளுமன்ற தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளதால் டெல்டா மாவட்டத்தில் இலை- தாமரை இடையே போட்டி போட்டுக்கொண்டு வேட்பாளர்களை தேர்வு செய்வதில் திரைமறைவு வேலையில் ஈடுபட்டுள்ளனர்.

நெற்களஞ்சிய எம்பி தொகுதிக்கு, தான் சிபாரிசு செய்யக்கூடிய நபருக்கு தான் சீட் கொடுத்து ஆக வேண்டும் என மாஜி அமைச்சர் ஒருவர் சேலத்துக்காரரிடம் பிடிவாதமாக இருந்து வருகிறாராம்… ஆனா, சேலத்துக்காரர் மாஜி அமைச்சருக்கு எந்தவித உத்தரவாதமும் கொடுக்கவில்லை. தனக்கு விசுவாசியாக இருக்க கூடிய வேட்பாளரை தான் நிறுத்த வேண்டும் என சேலத்துக்காரர் உறுதியாக சொல்கிறார். ஆனா, மாஜி அமைச்சரோ, அவரது ஆதரவாளரை தான் நிறுத்த வேண்டும் என காய் நகர்த்தி வருகிறார். இந்த தகவல் சேலத்துக்காரருக்கு சென்றதால் மாஜி அமைச்சர் மீது அதிருப்தியில் இருந்து வருகிறாராம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘எனக்கு எதிரா நடவடிக்கை எடுத்தா நடக்குறதே வேற என்று சவுண்ட் விடுறாராமே மாஜி…’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘கடலூர் மாவட்டத்தில் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு அதிமுக சார்பில் 4 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டு கட்சி பணிகள் நடந்து வருகிறது. இங்கு ஏற்கனவே இருந்த மாஜி அமைச்சர் பத் என்பவருக்கு எதிராக பலரும் அணி திரண்டதால் இந்த நடவடிக்கையை எடப்பாடி எடுத்தார். இதனால் அதிமுக தலைமை மீது அதிருப்தியில் இருந்த மாஜி அமைச்சர், சமீபத்தில் நடந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் உள்பட எந்த நிகழ்ச்சியையும் பிரமாண்டமாக நடத்தாமல் பெயரளவில் நடத்தி வருகிறாராம்.

இதனால் இவருக்கு ஒதுக்கப்பட்ட கடலூர், பண்ருட்டி தொகுதியில் மாஜி அமைச்சருக்கு எதிராக நிர்வாகிகள் திரண்டு உள்ளனர். மகனை மட்டும் கட்சி விழாக்களுக்கு அனுப்பிவிட்டு வீட்டிலேயே இருந்தால் எப்படி கட்சியை வளர்க்க முடியும் என கண்டன குரல்கள் வலுத்து வருகிறது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் இவரை வைத்து கொண்டு தேர்தலை சந்திக்க முடியாது என தலைமைக்கு பல புகார்களை மூத்த நிர்வாகிகள் அனுப்பி வருகின்றனராம்.

இதனால் இவரிடமிருந்து மாவட்ட செயலாளர் பதவியை பறித்து விட்டு புதிய நிர்வாகியை நியமிக்கலாம் என தலைமை யோசித்து வருவதாக தகவல்கள் வெளியானதால் மாஜி அமைச்சர் என்னை மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கினால் கடும் விளைகளை அதிமுக சந்திக்கும் என தனது நெருங்கிய சகாக்களிடம் பேசி வருகிறாராம். விரைவில் கடலூர் மாவட்ட அதிமுகவில் புதிய மாற்றம் ஏற்படும் என தொண்டர்கள் பேசி வருகின்றனர்…’’ என்றார் விக்கியானந்தா

You may also like

Leave a Comment

1 × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi