Monday, March 4, 2024
Home » கூட்டணிக்காக வலைவிரிக்கிறதுல தாமரை, இலைக்கு இடையே நடக்கும் போட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

கூட்டணிக்காக வலைவிரிக்கிறதுல தாமரை, இலைக்கு இடையே நடக்கும் போட்டி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘மாநகராட்சியில் மாயமான சர்வீஸ் புத்தகம் விவகாரம் சிலருக்கு வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாமே?’’ என்று ஆரம்பித்தார் பீட்டர் மாமா. ‘‘தூங்கா நகர் மாநகராட்சியில் கடந்த இலைக்கட்சி ஆட்சியில் சர்வீஸ் புத்தகம் மாயமாகி விட்டது. இதை கண்டுபிடிக்க யாரும் முயற்சி செய்யவில்லை. இந்நிலையில் இப்புத்தகம் மாயமானதால் பதவி உயர்வு வழங்குவதில் பெரும் சிக்கல் நீடித்து வருகிறது. கவுன்சில் செயலில் உள்ள ஆறெழுத்துக்காரர் இந்த புத்தகம் மாயமானதையே சென்னை அதிகாரியிடம் மறைத்து, பதவி உயர்வு பெற்றிருக்கிறாராம்.

ஆனால் தற்போதைய உயரதிகாரியானவர் விசாரணையை வேகப்படுத்தியுள்ளார். இது சிலரின் வயிற்றில் புளியை கரைத்துள்ளது. பதவி உயர்வுக்கு காத்திருப்போரோ புத்தகம் கிடைக்க வேண்டிய பிரார்த்தனையோடு நல்ல முடிவுக்கு காத்திருக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘கூட்டணிக்காக வலைவிரிக்கிறதுல தாமரை, இலைக்கட்சிகள் போட்டி போடுதாமே’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘கூடிய சீக்கிரத்துல நடக்கவுள்ள நாடாளுமன்ற தேர்தலிலும் தாமரை, இலைக்கட்சி கூட்டணி தொடரும் என கூறப்பட்டு வந்தது. இதனால் நிர்வாகிங்க மற்றும் தொண்டருங்க மத்தியில பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது.

ஆனா, தாமரை கட்சி மாநில தலைவரு, இலைக்கட்சி தலைவருங்க மற்றும் நிர்வாகிங்க குறித்து பேசிய பேச்சால் கூட்டணி முறிந்தது. இலைக்கட்சி பொதுக்குழு கூட்டத்துல பேசிய சேலத்துக்காரரும் இனி தாமரையுடன் கூட்டணி இல்லன்னு சொல்லிட்டாரு. இதுனால வருகிற தேர்தல்ல வேட்பாளருங்களுக்கு டெபாசிட் கூட கிடைக்காதுன்னு இலைக்கட்சி மற்றும் தாமரை கட்சி நிர்வாகிங்க வேதனையில புலம்புறாங்களாம். இதுக்கிடையில கடந்த தேர்தல்ல கூட்டணியில இருந்தவங்களுக்கு தாமரை கட்சியும், இலைக்கட்சியும் வலைவிரிக்க தொடங்கிட்டாங்களாம்.

இதுக்காக எவ்வளவு சீட்டு ஒதுக்குறது, கூட்டணி கட்சிகளுக்கு என்ன சலுகைகள் அறிவிக்கிறதுன்னு தீவிரமா ஆலோசிச்சுட்டு இருக்குறதா பரபரப்பா பேசப்படுது. ஆனா, யாருக்கு ஆதரவு கொடுக்குறது? கூட்டணிக்கு போலாமா, வேண்டாமான்னு கடந்த முறை கூட்டணியில இருந்தவங்க குழப்பத்துல இருக்காங்களாம். எந்த பக்கம் போனாலும் இடியாப்ப சிக்கல்தான்னு கூட்டணியே வேண்டாம்னு சிலர் முடிவு எடுத்திருக்காங்களாம்’’ என்று சொன்னார் விக்கியானந்தா.

‘‘கேண்டீனை திடீரென மூடியதால், பணியாளர்களே சேர்ந்து சாம்பார் சாதம் சமைச்சு சாப்பிட்ட கதையை சொல்லுங்களேன்’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘முக்கடல் சங்கமிக்கும் மாவட்டத்தில் உள்ள ஒரு டெப்போவில் சுமார் 400 தொழிலாளர்கள் வரை இருக்காங்க. தனியாரிடம் கேண்டீன் ஒப்படைக்கப்பட்டு சுவையான சாப்பாடு காலை, மாலை, இரவு என வழங்கப்பட்டு வந்தது. ஆனா, 3 மாதமா கேண்டீனுக்கு கொடுக்க வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லையாம். இதனால் திடீரென நேற்று கேண்டீனை மூடி சமைக்காமல் விட்டு விட்டார்களாம். மதிய சாப்பாடு இல்லாமல் ஊழியர்கள் திண்டாடியுள்ளனர்.

பசியோடு இருந்த பலரும் வெளியே ஓட்டலுக்கு போய் விட்டார்களாம். நிலைமையை சமாளிக்க அதிகாரிங்க உத்தரவுப்படி டிரைவர், கண்டக்டர்கள், பணியாளர்கள் சேர்ந்து சாம்பார் சாதம் சமைச்சு சாப்பிட்டு இருக்கிறார்களாம். முன் கூட்டியே கூறி இருந்தால், வீட்டில் இருந்தே சாப்பாடு கொண்டு வந்து இருப்போம் என்று ஊழியர்கள் மனம் நொந்துபோனார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் நேரத்தில் தேனிக்காரர் அணியினர் கூண்டோடு வெளியேற திட்டம் போட்டுட்டாங்களாமே’’ ஆச்சரியமாக கேட்டார் பீட்டர் மாமா.

‘‘டெல்டா மாவட்டத்தில் தேனிக்காரர், அவரது ஆதரவாளர்களை மாவட்ட செயலாளராக நியமித்தார். மன்னர் மாவட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளராக மாஜி நகராட்சி தலைவர் நியமிக்கப்பட்டார். அவரு நிர்வாகிகள் நியமிக்கும் பணியை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில் பொங்கலுக்கு பின்னர் மன்னர் மாவட்டத்தில் 21ம்தேதி நடை பெறக்கூடிய நிர்வாகிகள் கூட்டத்திற்கு தேனிக்காரர் வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுபற்றி மாவட்ட செயலாளர் நிர்வாகிகளுடன் சேர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டார்.

கூட்டம் பெரிய அளவில் நடத்த வேண்டும் என்றால் யார் செலவு செய்வது தொடங்கி யார் அதிகாரம் செலுத்துவது என்று நிர்வாகிகளுக்குள் கருத்துவேறுபாடு ஏற்பட்டதாம்… இதனால் முக்கிய நிர்வாகிகள் பணிகளில் ஈடுபட முன்வரவில்லை. தொண்டர்களே இல்லாத கட்சிக்கு நிர்வாகிகளுக்குள் ஏன் இப்படி அடித்து கொள்கின்றனர் என்று தேனிக்காரர் அணிக்குள்ளே கிண்டல் அடித்துக்கொண்டார்களாம். மன்னர் மாவட்டத்தில் நிர்வாகிகளுக்குள் கோஷ்டி பூசலால் தேனிக்காரர் அணியில் இருந்து கூண்டோடு வெளியேற நிர்வாகிகள் திட்டமிட்டிருக்காங்களாம்.

பொங்கலுக்கு பின்னர் நிர்வாகிகள் கூட்டம் நடக்கிறது சந்தேகம்தான்னு மாவட்ட செயலாளர் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நியமன எம்பிக்கு துண்டுவிரிக்கும் இலைக்கட்சியினர் பற்றி தெரியுமா?’’ என்று பீட்டர் மாமா கேட்டார். ‘‘அதைத்தான் சொல்ல வந்தேன், நீங்களே கேட்டுட்டீங்க… தூங்கா நகரத்து இலை கட்சியில் சீனியர் எம்எல்ஏவாக இருக்குற செல்லமானவர், தன் மகனுக்கு நியமன எம்பி சீட் வாங்கும் முடிவில் படுதீவிரமாக களமிறங்கியிருக்காராம். இதுக்காக பலரிடம் மறைமுக யோசனை கேட்டு வாறாராம்.

கட்சியில மாநில அளவுல பொறுப்பில் மகனை அமர வைத்தாலும், மக்கள் பிரதிநிதியாக்க முடியலையே என்ற ஏக்கம் வாட்டி வதைக்குதாம். ஏற்கனவே எம்பி தேர்தல்ல போட்டியிட்டு தோல்வியை தழுவிய நிலையில மீண்டும் போட்டியிட்டா கரை தாண்டுறது கஷ்டம்னு விஷயம் தெரிந்தவர்கள் செல்லமானவருக்கு ஆலோசனை சொல்லியிருக்காங்க. ஆனாலும் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூங்கா நகரத் தொகுதியில கட்சி தலைமை செல்லமானவரின் மகனுக்கு சீட் கொடுக்க முடிவு எடுத்துள்ளதாம்.

இதனை அறிந்த செல்லமானவர், தலைமையிடம் தனது மகனுக்கு எம்பி தேர்தல்ல சீட் வேண்டாம், நியமன எம்பிக்கு வாய்ப்பளிக்குமாறு கேட்க திட்டமிட்டிருக்கிறாராம். ஆனா, அவரது திட்டத்தை தெரிந்து கொண்டு தூங்கா நகரத்தின் உதயம், தெர்மகோல் உள்ளிட்ட சீனியர்கள் சிலர் நியமன பதவியை தங்களது ஆதரவாளர்களுக்கு கேட்டு இப்போதே துண்டு போட்டு, செல்லமானவருக்கு நெருக்கடி கொடுத்து வாறாங்களாம். இதுதான் தூங்கா நகர இலை கட்சியினர் மத்தியில இப்போது பரபரப்பான டாப்பிக்கா ஓடுதாம்’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

5 × 3 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi