Thursday, February 29, 2024
Home » உயர் போலீஸ் அதிகாரியின் காதல் லீலை கசிய காத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

உயர் போலீஸ் அதிகாரியின் காதல் லீலை கசிய காத்திருப்பதை பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

by Ranjith

‘‘அல்வா மாவட்டத்துல ஆதிதிராவிடர் நலத்துறையில் நடக்கிற அவலங்கள கண்டு மாணவ, மாணவிங்க கொதிச்சி போயிருக்காங்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..அதிலும் தனியார் பள்ளி, கல்லூரியில படிக்கிற ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு பணம் முழுசா போய் சேர்றதில்லையாம். துறையில 10 வருஷத்துக்கும் மேல சீட்ட தேய்க்கிற சில அலுவலர்கள், அரசு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மட்டுந்தான் ஸ்காலர்ஷிப் பணத்தை வங்கி கணக்குல நேரடியா ஏத்தறங்களாம். நெறய தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தொகைய மொத்தமா, நிறுவனத்திற்கே அனுப்பிவிட்டு, அதுக்கான கமிஷன கறந்துருந்தாங்களாம்.

இதனால ஸ்டூன்டன்ட் எல்லாம் எப்போ ஸ்காலர்ஷிப் வரும்னு சொல்லிக்கிட்டு தவியாய் தவிக்கிறாங்க. கேரட்ட காட்டி ஒட்டகம் ஓட்ற கதையாய் இப்படி ரொம்ப காலமா அரசு தர்ற நிதிய தராம இழுத்தடிக்கிறாங்களே என அல்வா மாவட்டத்துல ஆதிதிராவிட மாணவங்க மத்தியில புலம்பல் சத்தம் கேட்குதாம்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘பதவி கேட்டு ரொம்ப புலம்பி வர்றாராமே…’’ என இழுத்தார் பீட்டர் மாமா. ‘‘தென்கோடி மாவட்டத்தில் இலை கட்சியில் மாவட்ட செயலாளர் பொறுப்பை அலங்கரித்த மன்னர் பெயரை கொண்டவர் தேனி காரர் அணிக்கு தாவி மீண்டும் சேலம்காரர் அணிக்கு வந்து தனக்கு பதவி கேட்டு அடம் பிடித்து வருகிறாராம். ‘தென்கோடியில் உள்ள தம்பிகளின் குறைகளையும் கொஞ்சம் கேளுங்கள்’ என்று சமூக வலைதளங்களில் கெஞ்சி வருகிறாராம்.

கூடவே தற்போதுள்ள தென்கோடி மாவட்ட முக்கிய நிர்வாகி ஒருவரை குக்கர் கட்சியின் ஸ்லீப்பர் செல் என்று வெளிப்படையாகவே கிளப்பி விடுகிறாராம். படித்த வித்தை பதினெட்டையும் பார்த்தும் பதவிதான் வரவில்லை என்ன செய்வது என்று தனக்கு நெருங்கியவர்களிடம் இப்போது புலம்பி வருகிறாராம் மன்னரானவர். அண்ணனை பகைத்து பதிவிட்டால் எப்படி பதவி வரும் என்று எதிர்கேள்வி கேட்கின்றனராம் ரத்தத்தின் ரத்தங்கள்’’ என்றார் விக்கியானந்தா.  ‘‘ஒன்றிய அமைச்சர் மீது ஏன் கொதிக்கிறார்கள் உள்ளூர் பாஜ நிர்வாகிகள் ‘‘தென்னிந்தியாவின் எய்ம்ஸ் என அழைக்கப்படும் புதுச்சேரி கோரிமேட்டில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை நிர்வாகம் மீது ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் பாஜ அரசு மற்றும் திமுக எம்எல்ஏக்கள் சட்டசபையில் பரபரப்பு புகார்கள் கூறினர்.

அதாவது புதுவை உள்ளிட்ட தென்னிந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கானோர் தினமும் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் கூட கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் இனி வரும் காலங்களில் அலுவல் ரீதியாக இந்தியை பயன்படுத்த சுற்றறிக்கை அனுப்பிய விவகாரம் போன்றவை பயங்கரமாக வெடித்தது. தற்போதைய இயக்குநர் ராகேஷ் என்பவரை மாற்ற வேண்டும். இவர் இருந்தால் பொதுமக்களிடம் பாஜ அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும் என கூறினர். உடனே ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் பவுர்புல் பெண்மணி ஆகியோர் ஆய்வு செய்து நோயாளிகளுக்கு சிரமம் ஏற்படுத்த கூடாது என அறிவுரையும் வழங்கினர்.

ஆனாலும் அவரது செயல்பாடு மாறவில்லை. அவரை மாற்றியே காட்டுவோம் என பாஜ நிர்வாகிகள் சபதமிட்டனர். இது குறித்து பாஜ அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏக்கள் டெல்லி வரை சென்று மீண்டும் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் நேரிடியாகவே புகார் கூறினர். ஆனால் அவரை மாற்ற நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக அவருக்கு பணி காலம் முடிந்தும், விதிகளை மீறி மேலும் அவருக்கு ஓராண்டு பணி நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு அறிவித்தது புதுவை பாஜவின் முகத்தில் கரி பூசியது போன்று உள்ளதாக உள்ளூர் நிர்வாகிகள் கொதிக்கின்றனர்’’ என்றார் விக்கியானந்தா. ‘‘உயர் போலீஸ் அதிகாரியின் காதல் லீலை வில்லங்கமாகி விட்டது போல..’’ என சிரித்தார் பீட்டர் மாமா.

‘‘சென்னையை ஒட்டியுள்ள மாவட்டத்தில் உயர் போலீஸ் அதிகாரியாக இருந்தவர், இந்த மாவட்டத்துக்கு வந்தது முதல் அவரது நடவடிக்கையில் பெரிய அளவில் மாற்றம் தெரிகிறதாம். இவர், ஜெயலலிதாவுக்கு செக்யூரிட்டி அதிகாரியாக இருந்தாராம். ஜெயலலிதா சிறைக்கு சென்றபோது இவர்தான் பாதுகாப்பு அதிகாரியாம். இவர், அதிமுக ஆட்சியின்போது சசிகலா மூலம் நல்ல நல்ல பதவிகளில் இருந்தாராம். கோவையில் 4 ஆண்டுகள் மாவட்ட உயர் பதவி, எடப்பாடி ஆட்சியில் உளவுத்துறை என பல பதவிகளை கண்டவராம்.

தற்போது ஆட்சி மாறியவுடன் சென்னையை ஒட்டிய மாவட்டத்துக்கு உயர் பதவிக்கு வந்து விட்டாராம். அதிமுக தலைவர்களுக்கு நெருக்கமாக மட்டுமல்லாமல், அதிமுக ஆட்சியில் நல்ல பதவியில் வேலை பார்த்த அதிகாரிகளைக் கூட மாற்றிய அதிகாரிகள் இவருக்கு மட்டும் நல்ல பதவியை தூக்கி கொடுத்தார்களாம். இப்போது கூட வடமாநில முன்னாள் டிஜிபி ஒருவர் மூலம் மீண்டும் சென்னைக்குள் நல்ல பதவியை வாங்கிவிட்டாராம். தனக்கு உயர் அதிகாரிகளின் ஆதரவு இருந்ததால் சட்டம் ஒழுங்கு பணியை விட்டு விட்டு, காதல் பணியை செய்ய ஆரம்பித்து விட்டாராம். எப்போதும் அவர் போன் பிசியாகவே இருக்குமாம்.

அதற்கு காரணம், ஊரின் பெயரைக் கொண்ட பெண் டிஆர்ஓ ஒருவருக்கும் இவருக்கும் காதல் பத்திக்கிச்சாம். இவர்கள் இருவரும்தான் மணிக்கணக்கில் காதல் வசனம் பேசுகிறார்களாம். அதோடு மீட்டிங்கில் கூட பொதுமக்களோ, உயர் அதிகாரிகளோ முக்கியமான விஷயங்களை பேசிக் கொண்டிருந்தால் இவர்கள் இருவர் மட்டும் கண்களால் காதல் வசனம் பேசிக் கொண்டிருப்பார்களாம். அதில் தற்போது உச்சக்கட்டமாக கடந்த சில மாதங்களாகவே நள்ளிரவு 1 மணிக்கு உயர் போலீஸ் அதிகாரியின் வீட்டுக்கு அம்மணி வருவாராம்.

அதிகாலை வரை இருவரும் தீவிர டிஸ்கஸனில் இருப்பார்களாம். இருவரும் பைல் பார்த்தபிறகு அதிகாலை 4 மணிக்கு பெண் அதிகாரி புறப்பட்டுச் சென்று விடுவாராம். இந்த தகவல் தற்போது மெல்ல மெல்ல வெளியில் கசிய ஆரம்பித்ததும், சில போலீசார் பெண் அதிகாரி காரில் வருவதை வீடியோ எடுத்து வைத்துள்ளார்களாம். இப்போது, இந்த விவகாரம் வெளியில் தெரிய ஆரம்பித்ததும், எப்போது வீடியோ வெளியாகுமோ என்று இரு அதிகாரிகளும் பீதியில் உள்ளார்களாம். இப்போது போலீஸ் வட்டாரத்தில் இதுதான் பேசுபொருளாக இருக்கிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

one × three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi