‘‘அரசியல் செய்ய ஒன்னும் கிடைக்காமல் பெட்ரோல் குண்டு என புரளி கிளப்பிவிடுறதுல தாமரை கட்சி தீவிரமா இறங்கியிருக்கு போல..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வடமாநில நதி பெயரில் முடியும் மாவட்டத்தின் குடியில் முடியும் ஊருக்குள் தாமரை கட்சியின் பெட்ரோல் குண்டு அரசியல் பலரையும் அதிருப்திக்கு ஆளாக்கியிருக்கிறது. இக்கட்சியின் பிரமுகர்கள் பிரபலமடைவதற்காக, தாங்களே ஆட்களை செட்-அப் செய்து பெட்ரோல் குண்டை வீசுவது போல, பரபரப்பை கிளப்பி வருவதாக பல ஆண்டாகவே குற்றச்சாட்டு உள்ளது. போலீசார் விசாரணைக்கும் தாமரை கட்சியினர் ஒத்துழைப்பு வழங்காமல் ஒதுங்குவதால் போலீசாருக்கும் இது தீராத தலைவலியாக உள்ளது.
இவ்வூருக்கு அருகே புதிய நிலம் குறிக்கும் பெயர் கொண்ட ஊரின் வாரச்சந்தை பகுதியில் பேரூராட்சி வார்டு உறுப்பினர் மற்றும் ஒன்றிய அலுவலகமும் இருக்கிறது. இந்த அலுவலகத்தில் கடந்த 5ம் தேதி பெட்ரோல் குண்டு போடப்பட்டதாகவும், அலுவலகத்தின் வாசலில் இருந்த பிளக்ஸ் போர்டில் தீ பட்டு தலைவர்களின் படம் கிழிந்து உள்ளதாகவும் கூறி தாமரைக்கட்சியினர் புகார் அளித்தனர். போலீசார் அங்கு சென்று பார்த்தபோது ஏமாற்றமே மிஞ்சியது. பெட்ரோல் குண்டு போடப்பட்டதற்கான எவ்வித அறிகுறியும் அங்கில்லை. அலுவலக கதவின் கீழ் சிறிய அளவில் சூடத்தை கொளுத்தியதுபோல் சிறிய கருப்புக்கறை இருந்தது.
பிளக்ஸ் போர்டில் சிறிய அளவில் தீ பட்டது போல கிழிந்திருந்தது. இதனை கண்டு புலம்பிய போலீசார், ‘இவர்கள் அரசியல் செய்ய நாம் தான் கிடைத்தோமா’ என புலம்பி வருகின்றனர். என்ன நடந்தது என்றே முழுமையாக தெரியாமல் தாமரைக்கட்சியின் மாநிலத் தலைமையும் பெட்ரோல் பாம் என வாய்ஸ் கொடுத்துள்ளது தான் உச்சக்கட்ட காமெடி…’’ என்றார் விக்கியானந்தா. ‘‘நடைபயணத்தில் மாநில தலைவரை கிண்டல் அடித்தார்களாமே தாமரை தொண்டர்கள்..’’ என்று ேகட்டார் பீட்டர் மாமா. ‘‘தாமரை மாநில தலைவர் என் மண் என் மக்கள் நடைபயணத்தில் மன்னர் மாவட்டத்தில் மக்கள் ஆதரவு இன்றி இருந்தது.
சுதாரித்துக் கொண்ட தாமரை லோக்கல் நிர்வாகிகள், மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்க கூடிய மாலை நேரத்தில் திடீரென நிகழ்ச்சியை மாற்றினர். இதனையடுத்து கடைசியில் முடியக்கூடிய கோட்டை சட்டமன்ற தொகுதியில் மாநில தலைவர் நடை பயணம் மேற்கொண்டுள்ளார். அப்போது மாநில தலைவர், ஒன்றிய அரசின் சாதனைகளை பற்றி கொஞ்சம் கூட வாய் திறக்க வில்லை. அதற்கு பதிலாக எதிர்க்கட்சிகளை மட்டுமே விமர்சித்து பேசியுள்ளார். இவரது பேச்சை கேட்க வந்த சில தொண்டர்கள், மாநில தலைவரான அண்ணண் அவரை முன்நிறுத்தியும், எதிர்கட்சிகளை விமர்சித்தும் பேசிக்கொண்டு இருந்ததால் மோடியை மறந்து விட்டார் போல என அவர்களுக்குள் கிண்டல் அடித்தார்களாம்…
வழக்கம்போல் கரன்சி கொடுத்து வேனில் அழைத்து வரப்பெற்ற மகளிர் அணியினர் கூட, மாநில தலைவர் பேசுவதை கொஞ்சம் கூட காதுகொடுத்து கேட்கவில்லை. ஏனென்றால் அவர் எப்போதுமே பொய்களை மட்டுமே அவிழ்த்து விடுவார். கொஞ்சம் கூட உண்மையை பேசமாட்டார். அவரது பேச்சை கேட்டாலும் ஒன்றுதான்.. கேட்காமல் இருப்பது ஒன்றுதான்… கொடுத்த ‘கரன்சிக்காக’ இவ்வளவு நேரம் நின்றதே பெரிசு. இதனால் நம் வீட்டிற்கு செல்வோம் டிரைவர் அண்ணே… வேனை எடுங்க என கூறி வந்த வேனில் ஏறி சென்றனர். ‘கரன்சி’ வாங்கிய விசுவாசத்துக்காக சில தொண்டர்கள் மட்டுமே மாநில தலைவர் பேச்சை கடைசி வரையிலும் கேட்டு சென்றார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.
‘‘ஆள் மாத்தி டிரான்ஸ்பர் போட வெச்சி காரியத்த சாதிச்சிட்டாங்களாமே பவர்புல் லேடி காக்கி..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் மாவட்டத்துல உயர் காக்கி ஆபிஸ் இருக்குது. இந்த ஆபிஸ்ல சமூகத்தோட நீதி பிரிவு இருக்குது. இந்த பிரிவுல க என்ற எழுத்துல தொடங்குற 3 எழுத்து பெயர் கொண்ட பெண் காக்கி பணியாற்றி வர்றாங்களாம். இவங்க போலீசாக வேலைக்கு ேசர்ந்ததுல இருந்து, அந்த ஆபிஸ்லயேதான் வேலை செய்றாங்களாம். பொதுவாக 3 வருஷத்துக்கு மேல யாரும் ஒரே இடத்துல பணியாற்றக்கூடாதுன்னு விதி இருக்குது. ஆனா அந்த விதியெல்லாம் இந்த லேடி காக்கிக்கு இல்லையாம். பல வருஷமா ஒரே இடத்துல பணியாற்றி பவர்புல் காக்கியாக வலம் வர்றாங்களாம்.
இந்த தகவல் மாவட்ட உயர்காக்கிக்கு சமீபத்துல புகாராக போயிருக்குது. அந்த புகார வேற ஒரு லேடி காக்கி மேல சொல்லி, அவங்கதான் இவங்கன்னு, ஆள் மாத்தி காண்பிச்சு டிரான்ஸ்பர் போட வெச்சிட்டாங்களாம். இதுக்கு அந்த பிரிவுல இருக்குற ஸ்டார் காக்கியும், அங்க இருக்குற சூப்பிரென்ட்டு ஒருத்தரும் தான் காரணமாம். இதுல ஒரு அப்பாவி காக்கிய பலிகடா ஆக்கிட்டாங்களாம். இந்த ஆள்மாறாட்டம் விஷயத்தை மாவட்ட உயர்காக்கி விசாரிச்சு துணைபோனவங்க மேலயும், அந்த பவர்வுல் காக்கிமேலயும் நடவடிக்கை எடுக்கணும்.
அதோட நீதி பிரிவுல ஒரு கேமரா வெச்சா யார் என்ன செய்றாங்கன்னு எல்லாம் வெளிச்சத்துக்கு வரும்னு நேர்மையான காக்கிகளோட குரல் ஒலிக்கத்தொடங்கியிருக்குது’’ என்றார் விக்கியானந்தா. ‘‘புதுமுகம் வரப்போறதா வர்ற தகவலால பொன்னார் குழப்பத்துல இருக்கிறதா சொல்றாங்களே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா. ‘‘ஆமா..மக்களவை தேர்தலுக்கு அறிவிப்பு வெளிவர சில மாதங்களே உள்ள நிலையில் தாமரை கட்சி சார்பில் கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட இந்த முறை பொன்னானவருக்கு வாய்ப்பு கிடைக்குமா என்பது கேள்விக்குறியாகி உள்ளதாம்.
அடுத்தடுத்து இரண்டு முறை தோல்வியை தழுவியதால் இந்த முறை பிரபலமான ஒரு முகத்தை களமிறக்கினால் என்ன என்று கட்சி தலைமை ஆலோசனை நடத்துகிறதாம், அதற்கான வேலைகளை இப்போதே தொடங்கிவிட்டதாகவும் கூறுகின்றனர். அந்த வகையில் நாட்டாமை கட்சி தலைவரை கூட்டணி என்ற பெயரில் களமிறக்கவும் ஒரு ஆலோசனை முன் வைக்கப்பட்டுள்ளதாம். இதனை அறிந்து பொன்னானவரின் ஆதரவாளர்கள் சற்றே குழப்பம் அடைந்துள்ளார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.