பாரீஸ்: பிரபல செய்தி பரிமாற்ற சமூக ஊடகமாக டெலிகிராமின் சிஇஓ பாவெல் துரோவ், பாரீஸ் அருகே உள்ள லீ போர்கெட் விமான நிலையத்தில் பிரான்ஸ் போலீசாரால் கைது செய்யப்பட்டார். போதைப் பொருள் கடத்தல், மோசடி, டெலிகிராம் ஆப் மூலம் குற்றப் பரிவர்த்தனைகளுக்கு உடந்தையாக இருத்தல், சட்ட விவகாரங்களுக்கு தேவைப்படும் ஆவணங்களை பகிர்ந்து கொள்ள மறுத்தல் போன்ற குற்றங்களுக்காக துரோவ் கைது செய்யப்பட்டார். அவரது போலீஸ் காவல் நேற்று முன்தினம் மாலையுடன் முடியும் நிலையில், அவர் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி துரோவின் போலீஸ் காவலை மேலும் 48 மணி நேரத்திற்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தார். இதற்குள் துரோவ் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட வேண்டும் அல்லது அவர் விடுவிக்கப்பட வேண்டும்.