திருமலை: தெலங்கானா மாநில பிரிவினைக்கு பிறகு 9 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தது பிஆர்எஸ்(பாரத ராஷ்டிர சமிதி) கட்சி. இந்த கட்சி தலைவரும் முன்னாள் முதல்வரருமான சந்திரசேகர ராவ்வின் மகள் கவிதா மதுபான கொள்கை ஊழல் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டு சில மாதங்களுக்கு முன்பு வெளியே வந்தார். இந்த நிலையில் சமீபத்தில் தனது தந்தை சந்திரசேகர ராவுக்கு கவிதா எழுதிய கடிதம் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் சிலர் பி.ஆர்.எஸ். கட்சியை பலவீனப்படுத்துவதாகவும், பாஜகவுடன் இணைக்க முயற்சி செய்வதாகவும் குற்றம்சாட்டி உள்ளார்.
அதை தான் சிறையில் இருந்தபோது எதிர்த்ததாகவும், தான் உயிருடன் இருக்கும் வரை பி.ஆர்.எஸ் கட்சியை பாஜகவுடன் இணைக்க முடியாது என்று கூறியதால், தன்னை கட்சியில் இருந்து ஓரங்கட்டியதாகவும் குற்றம் சாட்டி உள்ளார். இந்நிலையில் இந்த கடிதத்தை கசியவிட்டது யார் என்று கேள்வி எழுப்பியுள்ள கவிதா, வேண்டுமென்றே கட்சியில் சிலர் கசியவிட்டுள்ளனர். பிஆர்எஸ் கட்சியை பாஜவுடன் இணைக்க தனது சகோதரர் கே.டி.ராமாராவ் முயற்சி வருகிறார் என பரபரப்பு குற்றம்சாட்டி உள்ளார். இதனால் சிலர் தனக்கு எதிராக மோசமான செய்திகளைப் பரப்புவதாகவும், தன்னை அவமதிக்க பணம் கொடுத்து சிலரை செயல்பட வைப்பதாகவும் கூறி உள்ளார்.
இந்த கடிதத்தை வெளியே கசியவிட்டவர்களை அம்பலப்படுத்த வேண்டும் என்றும் கவிதா கூறி வந்தார். மேலும் கட்சிக்குள் எழுந்த சர்ச்சையால் புதிய கட்சி தொடங்க மாட்டேன் என்று எப்படி சொல்ல முடியும் என்று கூறி இருந்தார். தற்போது பாஜவால் பி.ஆர்.எஸ். கட்சி இரண்டாக உடையும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே ஆந்திர மாநில முதல்வராக இருந்த ஜெகன்மோகன் ஆட்சியில் இருந்த 5 ஆண்டுகளாக பாஜக ஆதரவாக செயல்பட்டு வந்தார். இதனால் அவரது சகோதரி ஒய்.எஸ்.ஷர்மிளா அண்ணனிடம் இருந்து விலகி தெலங்கானாவில் தனிக்கட்சி தொடங்கி தேர்தலுக்கு சில ஆண்டுகள் முன்பு காங்கிரஸ் கட்சியில் இணைந்து அண்ணனுக்கு எதிராக ஆந்திராவில் பிரசாரம் செய்தார்.
இது கடைசியில் தெலுங்கு தேசம், ஜனசேனா, பாஜக கூட்டணிக்கு பலம் சேர்த்து ஆட்சியை பிடிக்க செய்தது. தற்போது தெலங்கானாவிலும் மாநில கட்சியில் குடும்ப பிரச்னை தலைதூக்க தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. தென்னிந்தியாவில் நேரடியாக ஆட்சிக்கு வரமுடியாத பாஜ மாநில கட்சிகளில் குடும்ப பிரச்சனையை ஏற்படுத்தி கட்சியை உடைத்து தனக்கு சாதகமாக மாற்றி கூட்டணி அமைத்து வெற்றிக்கு திட்டமிட்டு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.