ஐதராபாத்: தெலங்கானா கலால்துறை அமைச்சராக இருப்பவர் ஸ்ரீனிவாஸ் கவுட். இவர் 2018ல் நடந்த மகபூப்நகர் சட்டமன்ற தேர்தலில் உண்மைகளை மறைத்து பிரமாண பத்திரம் தாக்கல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஸ்ரீனிவாஸ் கவுட் சேர்க்கப்பட்டார். அதே சமயம் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் மற்றும் அதிகாரிகள் இணை குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
எம்பி, எம்எல்ஏக்கள் மீதான வழக்கை விசாரிக்கும் விசாரணை சிறப்பு அமர்வு நீதிமன்றத்தின் நீதிபதி கே.ஜெயகுமாரின் உத்தரவு அடிப்படையில் ஆக.11ல் அவர்கள் அனைவர் மீதும் எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை விசாரித்த உயர் நீதிமன்றம், நீதிபதி ஜெயகுமார் எந்தவித ஆரம்ப விசாரணையும் நடத்தாமலும், புகார்தாரரின் வாக்குமூலத்தை பதிவு செய்யாமலும், அவசர கதியில் செயல்பட்டுள்ளார். எனவே தெலங்கானா சிவில் சர்வீசஸ் விதிகள் 1991ன் கீழ் நீதிபதி சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார் என்று அறிவித்தது.