திருமலை: உடல்நலம் பாதித்த வாலிபருக்கு மாந்திரீக பூஜை செய்வதாக கூறி நிர்வாணப்படுத்தி அடித்து கொடுமைப்படுத்தியதால் அவர் பரிதாபமாக இறந்தார். சடலத்தை எரிக்க முயன்ற போலி சாமியாரை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டம் சென்னூர் நகரை சேர்ந்தவர் தாசரிமது(35). பல மாதங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்ட இவர் தொடர்ந்து பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுள்ளார். ஆனால் உடல்நிலை சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னூருக்கு சாமியார் போன்ற வேடத்தில் ஒருவர் வந்துள்ளார். அவரை சந்தித்த தாசரிமதுவின் குடும்பத்தினர், அவரின் உடல்நிலை குறித்து கூறினர். அதற்கு அவர், தீயசக்தி சேர்ந்துள்ளதால் உடல்நிலை பாதித்துள்ளது. அந்த தீயசக்தியை உடலில் இருந்து வெளியேற்ற மாந்திரீக பூஜை செய்ய வேண்டும் எனக்கூறினார். இதனை நம்பிய தாசரிமது குடும்பத்தினர் பூஜை செய்ய ஒப்புக் கொண்டனர்.
அதன்படி நேற்று முன்தினம் கோதாவரி ஆற்றின் அருகே தாசரி மதுவை அழைத்துச்சென்று மாந்திரீக பூஜைக்கான ஏற்பாடு செய்தனர். அங்கு தாசரிமதுவை நிர்வாணப்படுத்தி உட்கார வைத்த போலி சாமியார், மந்திரம் சொல்வது போல் நடித்து அவரை சரமாரியாக அடித்து கொடுமைப்படுத்தியுள்ளார். இதனால் வலி தாங்காமல் அலறி துடித்த தாசரிமது, திடீரென மயங்கி விழுந்து இறந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் கேட்டபோது, போலி சாமியார் பொய் சொல்லி சமாளித்துள்ளார். இதையடுத்து குடும்பத்தினரை சமாதானம் செய்த போலி சாமியார், உடனடியாக சடலத்தை யாருக்கும் தெரியாமல் எரிக்க ஏற்பாடு செய்தார்.
இதனிடையே போலி சாமியார் பூஜை செய்தபோது அங்கிருந்த தாசரிமதுவின் உறவினர், ரகசியமாக செல்போனில் வீடியோ எடுத்தார். தாசரிமது இறந்தவுடன் அதிர்ச்சியடைந்த அவர், வீடியோவை போலீசாருக்கு அனுப்பினார். அதனை கண்ட போலீசார் உடனே அங்கு வந்து தாசரிமதுவின் சடலத்தை மீட்டனர். தொடர்ந்து, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக சென்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் மற்றும் அவருடன் இருந்தவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர். தாசரி மதுவின் குடும்பத்தினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் போலி சாமியாரின் பெயர் உள்பட பல்வேறு விவரங்கள் குறித்தும், இதேபோல் வேறு யாருக்காவது பூஜை செய்துள்ளாரா என்பது குறித்தும் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.