தெலுங்கானா: பயணிகளுடன் சென்ற அரசுப் பேருந்தை திருடிச் சென்ற கொள்ளையன் டீசல் தீர்ந்ததால் பேருந்தை நடுவழியில் நிறுத்திவிட்டு தப்பியோடிய ருசிகர சம்பவம் தெலுங்கானாவில் நடந்துள்ளது. தெலுங்கானாவின் சித்திபேட்டை அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநரான சுவாமி கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வழக்கம் போல் பேருந்தை போக்குவரத்து பனிமலையில் நிறுத்தியுள்ளார். ஆனால் பேருந்தின் சாவியை அவர் எடுக்க மறந்த நிலையில், அன்றிரவு அங்கு வந்த ஒருவர் பேருந்தை எடுத்துக்கொண்டு வெமுலவாடா சென்றிருக்கிறார்.
பின்னர் அங்கிருந்து ஹைதராபாத் செல்வதாக கூறி சுமார் 35 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற அந்த நபர், பயணிகளிடம் டிக்கெட் கொடுக்காமல் பணத்தை மட்டும் பெற்றுக்கொண்டு பாதி வழியில் நடத்துனர் வருவார் என கூறியுள்ளார். ஆனால் ஹைதராபாத் செல்லும் முன்பே பாதி வழியில் பேருந்து நின்றதால் பயணிகளிடம் வசூலித்த பணத்தை சுருட்டிக்கொண்டு அந்த நபர் தப்பியோடினார். இதனை பயணிகள் செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்த போலீசார், பேருந்தை மீட்டு தப்பியோடிய மர்மநபர் குறித்து பயணிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.