ஐதராபாத்: தெலங்கானாவில் கடிதம் லீக்கான விவகாரத்தில் என் தந்தை கேசிஆரை சுற்றியும் பேய்கள் சூழ்ந்துள்ளதாக எம்எல்சி கவிதா ஆவேசமாக கூறினார். தெலங்கானாவில் பாரத் ராஷ்டிர சமிதி கட்சியின் மூத்த தலைவரும் எம்எல்சியுமான கே.கவிதா, தனது தந்தையும் கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான கே.சந்திரசேகரராவுக்கு (கேசிஆர்) எழுதிய கடிதம் கசிந்தது. இதுதொடர்பாக அவர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து கவிதா கூறுகையில், ‘எனது தந்தை கேசிஆர் கடவுளை போன்றவர்.
ஆனால் அவரைச் சுற்றியும் சில பேய்கள் (தீயவர்கள்) உள்ளனர். கட்சிக்குள் சிலர் எனக்கு எதிராக சதி வேலைகளை செய்கின்றனர். இந்தக் கடிதம் கசிந்தது எப்படி?, அதற்கு யார் காரணம்? என்பது குறித்து விசாரிக்க வேண்டும். நான் கேசிஆரின் மகள். எனது தனிப்பட்ட கடிதமே கசிந்திருக்கும்போது, கட்சியில் உள்ள மற்றவர்களின் நிலை என்னவாக இருக்கும்?. மேலும், காங்கிரஸ் மற்றும் பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி எங்களது கட்சியை விமர்சிக்கின்றனர்.
எங்களது கட்சிக்குள் உள்ள சிறிய குறைகளை சரிசெய்து, மற்ற கட்சிகளுக்கு ரகசியமாக உதவும் தலைவர்களை கட்சியில் இருந்து நீக்கினால், கேசிஆர் தலைமையில் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிக்கும்’ என்றார். முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் வாரங்கலில் நடந்த கட்சியின் பொதுக் கூட்டத்தின் நிறைகுறைகளைப் பற்றி, தனது தந்தைக்கு கவிதா எழுதிய ரகசிய கடிதம், தற்போது பொதுவெளியில் கசிந்ததுள்ளதால் கட்சிக்குள் பிரச்னை வெடித்துள்ளது. இந்த சம்பவம் தெலங்கானா அரசியல் வட்டாரங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.