ஹைதராபாத்: தெலங்கானா மாநிலம் ராமகுண்டம்-ராகவாபுரம் இடையே சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானதால் ரயில் சேவை கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது. பெல்லாரி- உத்தரப்பிரதேசத்துக்கு தாது லோடு ஏற்றியபடி சரக்கு ரயில் சென்றுள்ளது. பெத்தப்பள்ளி மாவட்டம் ராமகுண்டம்-ராகவபுரம் இடையே வந்து கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்தில் சிக்கியது. இதில் ரயிலில் இருந்த 44 பெட்டிகளில் 11 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதனால் அப்பகுதியில் ரயில் சேவை கடுமையாக பாதிக்கபப்ட்டுள்ளது.
வட மாநிலங்களில் இருந்து சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வருகையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதே போல சென்னையில் இருந்து புறப்படும் ரயில்களின் புறப்பாடும் தாமதமாகி உள்ளது. சரக்கு ரயில் தடம் புரண்டதால், 20 பயணிகள் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. 10 திருப்பி விடப்பட்டதாக தெற்கு மத்திய ரயில்வே சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், ரயில் இயக்கத்தை தொடங்குவதற்கான முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.