திருமலை: தேர்தல் பிரசாரம் மேற்கொள்ள தெலங்கானா முதல்வர் சந்திரகேரராவ் சென்ற ஹெலிகாப்டரில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால் பண்ணையில தரையிறக்கப்பட்டது. தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ் மாநிலத்தில் வருகிற 30ம்தேதி நடைபெறக்கூடிய சட்டபேரவை தேர்தலில் பாரத் ராஷ்டிரிய சமிதி(பிஆர்எஸ்) கட்சியின் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவ்வாறு நேற்று சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக தேவகத்ராவுக்கு எர்ப்பள்ளியில் உள்ள தனது விவசாய பண்ணையில் இருந்து ஹெலிகாப்டரில் புறப்பட்டார்.
ஆனால், ஹெலிகாப்டர் புறப்பட்டு மேலே பறந்து சிறிது தூரம் சென்ற நிலையில் பைலட் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதை கண்டறிந்தார். உடனே உஷாரான விமானி ஹெலிகாப்டரை மீண்டும் விவசாய பண்ணைக்கு அவசரமாக திருப்பி பத்திரமாக தரையிறக்கினார். இதனை தொடர்ந்து மாற்று ஹெலிகாப்டரை விமான நிறுவனத்தினர் ஏற்பாடு செய்தனர். இதையடுத்து, 1 மணிநேரம் காலதாமதமாக புறப்பட்டு மாற்று ஹெலிகாப்டரில் தேவகத்ராவுக்கு சென்று தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார்.