ஐதராபாத்: தெலங்கானாவின் 119 தொகுதிகளுக்கும் வரும் 30ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு பாஜ தேர்தல் அறிக்கையை ஒன்றிய அமைச்சர் அமித் ஷா நேற்று வௌியிட்டார். அதில், “தெலங்கானாவில் பாஜ ஆட்சி அமைந்தால் 6 மாதங்களில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும். அரசியல் சட்டத்துக்கு முரணான மத அடிப்படையிலான இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும். காளேஸ்வரம், தாரணி ஊழல் மற்றும் நிதிமுறைகேடுகள் பற்றி விசாரிக்க உச்சநீதி மன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை குழு அமைக்கப்படும்.
பாஜ ஆட்சி செய்யும் மாநிலங்களுக்கு இணையாக பெட்ரோல், டீசல் மீதான மதிப்பு கூட்டு வரி குறைக்கப்படும். உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு ஆண்டுதோறும் 4 இலவச எரிவாயு சிலிண்டர்கள் விநியோகம். சிறு, குறு விவசாயிகளுக்கு இடுபொருள் உதவியாக ரூ.2,500 வழங்கப்படும். நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.3,100 வழங்கப்படும்” என பல்வேறு கவர்ச்சி அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன.