திருமலை: தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் 2 லட்சம் பேருக்கு அரசு வேலை, விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம் என்பன உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வௌியிட்டுள்ளது. தெலங்கானாவின் 119 பேரவை தொகுதிகளுக்கும் வரும் 30ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு ஆளும் பிஆர்எஸ் கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கையை வௌியிட்டது. ஐதராபாத் காந்தி பவனில் நடந்த நிகழ்ச்சியில் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தேர்தல் 62 நலத்திட்டங்களை உள்ளடக்கிய, 42 பக்க தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.
அதில், “தெலங்கானாவில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த முதல் ஆண்டில் 2 லட்சம் அரசு காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை, விவசாயிகளுக்கு 24 மணி நேர இலவச மின்சாரம், காலேஸ்வரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி, வெள்ளத்தடுப்புக்கு கரைகள் அமைத்தல், பிப்ரவரி 1 முதல் ஜூன் 1 வரை குரூப் வேலைகளுக்கான அறிவிப்பு வெளியீடு, முதல்வர் முகாம் அலுவலகத்தில் பிரஜா தர்பார் தினமும் நடத்துதல், ரூ.2 லட்சம் கடன் தள்ளுபடி மற்றும் ரூ.3 லட்சம் வரை வட்டியில்லா கடன், மாநிலத்தில் புதிய டிரிபிள் ஐடிக்களை உருவாக்குதல், விதைகள், டிராக்டர்கள் மற்றும் உரங்கள் வாங்குவதற்கு மானியம், 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவருக்கும் ஸ்கூட்டர், வேலையற்றோர் மற்றும் இளைஞர்களுக்கான ஆணையம், ரூ.10 லட்சம் வரை வட்டியில்லா கடன், ஜூன் 2ல் அறிவிப்பு வெளியிட்டு செப்டம்பர் 17க்குள் முன் காலி பணியிடம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
வேலையில்லாத இளைஞர்களுக்கு உதவித்தொகை மாதம் ரூ.4,000, விவசாயிகள் மற்றும் குத்தகை விவசாயிகளுக்கு ரூ.15 ஆயிரம் நிதியுதவி, விவசாய தொழிலாளர்களுக்கு ரூ.12 ஆயிரம் நிதியுதவி, அனைத்து பயிர்களுக்கும் ஆதரவு விலை, சர்க்கரை ஆலைகள் திறப்பு, மஞ்சள் வாரியம் அமைத்தல், நிலமற்ற விவசாயிகளுக்கும் காப்பீடு, தரணி போர்ட்டல் ரத்து செய்வது, தெலங்கானா போராட்ட தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் கவுரவ தொகை, தியாகிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை,மாணவர்களுக்கு இலவச வைபை, ஆரோக்கியஸ்ரீ திட்டம் ரூ.10 லட்சமாக அதிகரித்து மருத்துவ சிகிச்சை,
ஒவ்வொரு மாணவருக்கும் ரூ.5 லட்சம் கல்வி காப்பீட்டு அட்டை, மதிய உணவு திட்ட தொழிலாளர்களின் ஊதியம் ரூ.10,000 அதிகரிப்பு என பல்வேறு கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெற்றுள்ளன. காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை கீதை, குரான், பைபிள் போன்றவற்றுடன் ஒப்பிட்டு வெளியிட்ட நிலையில், இந்த தேர்தலில் காங்கிரஸ் சுனாமியை போன்ற எழுச்சியுடன் வெற்றி பெறும். இதனால் மாநிலத்தில் உள்ள அனைவரும் பயனடைவார்கள் என மாநில தலைவர் ரேவந்த் தெரிவித்துள்ளார்.