ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஜெய்னூரில் சாலையில் நடந்து சென்ற பழங்குடியின பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூரில் இருந்து பழங்குடியின பெண் ஒருவர் சிர்பூரில் உள்ள தனது தாய் வீட்டுக்கு சென்றபோது பலாத்காரம் செய்யப்பட்டார். சாலையில் நடந்துசென்ற பெண்ணை வலுக்கட்டாயமாக ஆட்டோவில் ஏற்றிச் சென்று ஆட்டோ ஓட்டுனர் பாலியல் பலாத்காரம் செய்தார்.
பலாத்காரத்தை தடுத்தபோது ஆட்டோ ஓட்டுனர் ஷேக் மஸ்த் கொடூரமாக தாக்கியதில் பெண் மயக்கம் அடைந்தார். மயக்க நிலையில் இருந்த பெண் சுயநினைவுக்கு வந்த பிறகு தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து உறவினர்கள், போலீசில் புகார் தெரிவித்தார். பெண் வன்கொடுமை செய்யப்பட்டதை கண்டித்து ஜெய்னூரில் ஆதிவாசி சங்கத்தினர் ஆர்ப்பாட்டம், முழுஅடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்னூரில் ஆயிரக்கணக்கான பழங்குடியினர் திரண்டு குற்றவாளியை தூக்கிலிட வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டவரின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது.
இரு சமுகத்தினரும் பல கடைகளில் நுழைந்து அடித்து உடைத்து சாலையில் கொண்டு வந்து பொருட்களுக்கு தீ வைத்ததால் பதற்றம் நிலவி வருகிறது. போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த சிறப்பு போலீஸ் படைகள் குவிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அரசு சார்பில் நீதி வழங்கப்படும் என அமைச்சர் சீதக்கா உறுதி அளித்துள்ளார். டிஜிபி ஜிதேந்தர், கூடுதல் டிஜிபி மகேஷ் பகவத் ஆகியோர் ஜெய்னூரில் நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மாவட்ட நிர்வாகம் ஜெய்னூரில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவுவதை தடுக்கும் வகையில் இணையதள சேவை முடக்கப்பட்டது.