*உயிரிழந்த குடும்பத்துக்கு ₹4 லட்சம் இழப்பீடு
திருமலை : தெலங்கானாவில் கனமழையால் 17 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநிலத்தில் கனமழை காரணமாக முலுகு மாவட்டத்தில் உள்ள மலைவாழ் பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் குளங்கள் நிரம்பி வழிகின்றன. கடந்த 3 நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஓடைகள், காட்டாற்று வெள்ளமாக மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கனமழையால் அந்தந்த கிராமங்களில் உள்ள குளங்கள், மதகுகள் உடைந்து வெள்ளநீர் கிராமங்களுக்குள் புகுந்து உள்ளது.
வரலாற்றில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை காரணமாக முலுகு மாவட்டத்தில் 8 பேரும், ஹனுமகொண்டா மாவட்டத்தில் 3 பேரும், மகபூபாபாத் மாவட்டத்தில் 2 பேரும், பூபாலபள்ளி மாவட்டத்தில் ஒருவரும், கம்மம் மாவட்டத்தில் 3 பேரும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ளனர். மேலும், 9 பேரை காணவில்லை.அவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ₹4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும்.
உடனடி நிவாரணமாக 25 ஆயிரம் வழங்கப்படும் என்று மலைவாழ் மக்கள் மற்றும் பெண்கள் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் சத்யவதி ரத்தோர் அறிவித்துள்ளார். மழை குறைந்தாலும் மழையால் ஏற்பட்ட வெள்ளநீர் வடியாததால் வெள்ளத்தால் சூழ்ந்த பல கிராமங்களில் ஹெலிகாப்டர் மூலம் தேசிய பேரிடர் மீட்பு படையினர் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி வருகின்றனர்.