Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad Cement
search-icon-img
Advertisement

தேஜ கூட்டணியில் அதிமுக-பாஜ உள்ளது பாஜவுடன் பல கட்சிகள் கூட்டணியில் உள்ளது: எடப்பாடி புது தகவல்

திருச்சி: அதிமுக பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி, மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் பிரசாரத்தின் ஒரு பகுதியாக சிவகங்கை மாவட்டத்தில் பிரசாரம் மேற்கொள்கிறார். இதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று எடப்பாடி பழனிசாமி திருச்சி வந்தார். விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: இதுவரை 49 சட்டமன்ற தொகுதிகளில் பயணத்தை மேற்கொண்டு உள்ளேன். தேசிய ஜனநாயக கூட்டணியில் அதிமுக, பாஜ உள்ளது. பாஜவுடன் பல கட்சிகள் கூட்டணி வைத்துள்ளார்கள். தேர்தலுக்கு இன்னும் எட்டு மாத காலம் இருக்கிறது.

தேர்தல் அறிவித்த பின் கூட்டணியில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை தெளிவாக அறிவிப்பேன். இவ்வாறு அவர் கூறினார். காங்கிரஸ் தலைமையில் தவெக இணைந்து 3வது கூட்டணி அமையுமா என்று நிருபர்கள் கேட்டதற்கு, தேர்தலுக்கு இன்னும் 8மாதங்கள் இருக்கிறது. எது வேண்டுமானாலும் நடக்கலாம். யூகத்தின் அடிப்படையில் பதில் சொல்ல முடியாது. ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு நிலைப்பாடு இருக்கிறது. அதனடிப்படையில் அந்த அந்த கட்சிகள் கூட்டணி குறித்து முடிவெடுப்பார்கள் என்று எடப்பாடி பதில் அளித்தார்.

பாஜ கூட்டணியில் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் வந்தால், அதிமுகவின் நிலை என்ன என்ற கேள்விக்கு, எடப்பாடி, கற்பனையாக கேட்கும் கேள்விக்கு, யூகத்தின் அடிப்படையில் என்னால் பதில் அளிக்க முடியாது. மற்ற கட்சிகள் கூட்டணி குறித்து அந்த அந்த கட்சி தலைமையிடம் தான் கேட்க வேண்டும் என்று பதில் அளித்தார். தமிழகத்திற்கு கல்வி நிதி ஒதுக்காத ஒன்றிய அரசுக்கு, ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்திருப்பது குறித்து கேட்டதற்கு அதுபற்றி அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பதில் அளித்தார்.

* முடிஞ்சுபோன கதை: எடப்பாடி ஆவேசம்

வடமாவட்டங்களில் பிரசாரம் செய்தபோது வன்னியர்களுக்கு 10.5 சதவீதம் இடஒதுக்கீடு குறித்து பேசியதற்கு, தென்மாவட்டங்களில் உங்களுக்கு எதிராக போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறதே என பத்திரிகையாளர்கள் கேட்டனர். அதற்கு எடப்பாடி, அது எல்லாம் முடிஞ்சு போன கதை. இந்த விவகாரத்தில் தேவையில்லாமல் மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்.

இதை வேண்டுமென்றே பெரிதாக்க வேண்டாம். இதை எல்லாம் பத்திரிகையில் போட்டு விறுவிறுப்பான செய்தி வரணும், மக்களிடம் குழப்பத்தை உண்டு பண்ணவேண்டும் என்பதற்காகவே இந்த மாதிரி கேள்வியை கேட்கிறீர்கள் என்று ஆவேசமாக பதில் அளித்தார். அப்போது அங்கிருந்த அதிமுகவினர் கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

* கூட்டத்திற்கு வந்த நிர்வாகி மரணம்

திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கம் சாத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் நாகராஜன் (71). அதிமுக கிளைச் செயலாளர். இவர், நேற்று இரவு திருப்புத்தூரில் நடந்த எடப்பாடி பழனிசாமி கூட்டத்திற்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தபோது உயிரிழந்தார்.