புதுடெல்லி: பாதுகாப்புக் கொள்முதலில் ஊழலில் ஈடுபட்டதாகக் கூறி 2001ம் ஆண்டு தெஹல்கா செய்தி இணையதளம் வெளியிட்ட செய்தியை எதிர்த்து ராணுவ மேஜர் ஜெனரல் எம்.எஸ். அலுவாலியா டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி நீனா பன்சால் கிருஷ்ணா விசாரித்தார். இந்த மனு மீது தீர்ப்பளித்த நீதிபதி பன்சால் கிருஷ்ணா கூறுகையில்,’ஒரு நேர்மையான ராணுவ அதிகாரியின் நற்பெயருக்குக் கடுமையான கேடு விளைவிப்பதை விட அப்பட்டமான அத்துமீறல் வேறு எதுவும் இருக்க முடியாது.
இந்த விவகாரத்தில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியிடப்பட்ட மன்னிப்பு போதுமானதல்ல. அது அர்த்தமற்றது. எனவே தெஹல்கா செய்தி நிறுவனத்திற்கு ரூ.2 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது. இதை டெஹல்கா.காம், அதன் உரிமையாளர் எம்.எஸ் பப்பலோ கம்யூனிகேஷன்ஸ், அதன் உரிமையாளர் தருண் தேஜ்பால் மற்றும் இரண்டு நிருபர்களான அனிருத்தா பஹால், மேத்யூ சாமுவேல் ஆகியோர் செலுத்த வேண்டும்’ என்று உத்தரவிட்டார்.