சென்னை: போலீசாரின் எச்சரிக்கையை மீறி நந்தனம் பகுதியில் இயங்கி வரும் தனியார் பாரில் விடிய விடிய இளம் பெண்கள் மற்றும் வாலிபர்கள் பலர் மது விருந்துகளுடன் குத்தாட்டம் போட்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து விரைந்து சென்று போலீசார் போதையில் தள்ளாடிய இளம் ஜோடிகளை விரட்டி அடித்தனர். மேலும், இது தொடர்பாக பார் மேலாளரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை மாநகர காவல் எல்லையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் பார்கள் இரவு 11 மணி வரை தான் இயங்க வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்ேதார் உத்தரவிட்டுள்ளார். அதன்படி சென்னை மாநகர காவல் எல்லையில் உள்ள 12 காவல் மாவட்டங்களில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், ரிசாட்டுகள், தனியார் பார்களை மதுவிலக்கு அமலாக்கத்துறை போலீசார் மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார் கண்காணித்து இரவு 11 மணிக்கு மேல் இயங்கும் பார்கள் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், போலீசார் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் தனியார் பார்களை இரவு நேரங்களில் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.இந்நிலையில் நந்தனம் பகுதியில் ‘பிக் புல்’ என்ற பெயரில் தனியார் பார் ஒன்று இயங்கி வருகிறது. இந்த பாரில் நேற்று இரவு 11 மணிக்கு மேல், பார் முகப்பு கதவுகளை மூடிவிட்டு மது விருந்து நடப்பதாக சைதாப்பேட்டை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி சைதாப்பேட்டை போலீசார் நேற்று இரவு 1 மணிக்கு பிக் புல் பாருக்கு நேரில் சென்றனர். அப்போது பார் உள்பக்கமாக பூட்டப்பட்டு மது விருந்துகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் இளம் ஜோடிகள் நடனத்துடன் இயங்கியது தெரியவந்தது. உடனே போலீசார் பார் மேலாளரிடம், உடனே இசை நிகழ்ச்சியை நிறுத்திவிட்டு அனைவரையும் வெளியே அனுப்புங்கள் என்று எச்சரித்துள்ளனர்.
ஆனால் மேலாளர் மற்றும் போதையில் இருந்த வாலிபர்கள் மற்றும் இளம் பெண்கள் பலர் நாங்க வெளியே போக முடியாது என்று கூறி மீண்டும் நடனமாட தொடங்கினார். பின்னர் சம்பவம் குறித்து போலீசார் உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி சைதாப்பேட்டை இன்ஸ்பெக்டர் சிவக்குமார் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அதிரடியாக பாருக்குள் நுழைந்தனர். அப்போது இளம் பெண்கள் பலர் மது மயக்கத்தில் தள்ளாடியபடி வாலிபர்கள் மடியில் தவழ்ந்து கிடந்தனர். இதை பார்த்த போலீசார் அதிரடியாக அனைவரையும் விரட்டினர். சில இளம் பெண்கள் மது மயக்கத்தில் இருந்ததால் அவர்களை போலீசார் பாதுகாப்புடன் அவர்கள் நண்பர்கள் உதவியுடன் பத்திரமாக அனுப்பி வைத்தனர். அதைதொடர்ந்து சட்டவிரோதமாக இரவு 11 மணிக்கு மேல் பார் நடத்தியதாக சைதாப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து அதிரடியாக பார் மேலாளரை கைது செய்தனர். போலீசாரின் தடையை மீறி பார் நடந்ததால் பாருக்கு சீல் வைக்க உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.