ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதூர் அருகே மரத்தின் மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில், 2 வாலிபர்கள் பலியாகினர். மேலும், ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்ரீபெரும்புதூர் அருகே சோமங்கலம் பகுதியை சேர்ந்தவர்கள் ரமேஷ் (23), விக்னேஷ் (17), விஜய் (17). இவர்கள், 3 பேரும் கூலி வேலை செய்து வந்தனர். இந்நிலையில், நேற்று 3 பேரும் பைக்கில், தாம்பரம் – சோமங்கலம் சாலையில் தாம்பரம் நோக்கி சென்றுகொண்டிருந்தனர். அப்போது, நடுவீரப்பட்டு பொழுதுபோக்கு பூங்கா அருகே சென்றபோது, பைக் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில், 3 பேரும் தூக்கி வீசப்பட்டதில் பலத்த படுகாயம் அடைந்தனர்.
இதையடுத்து, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள், சிலர் விபத்தில் சிக்கிய 3 பேரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் ரமேஷ், விஜய் ஆகிய இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த விக்னேஷுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், இந்த விபத்து போலீசார், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.