அண்ணாநகர்: திருவேற்காடு பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ். இவர், நேற்று முன்தினம் இரவு முகப்பேர் அருகே பாடி குப்பத்தில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். அங்கு, அதே பகுதியை சேர்ந்த பிரபல ரவுடி மணிகண்டன் மற்றும் நண்பர்களுடன் காளிதாஸ் மது அருந்தியுள்ளார். அப்போது, போதையில் காளிதாசுக்கும், மணிகண்டனுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு, ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அவர்களை, சக நண்பர்கள் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். பின்னர், காளிதாசை செல்போனில் அழைத்த ரவுடி மணிகண்டன், சமாதானம் பேசி, மீண்டும் பாடி புதூர் பகுதிக்கு மது அருந்துவதற்காக அழைத்துள்ளார். இதை நம்பி காளிதாஸ் அங்கு வந்து, மீண்டும் மது அருந்தியுள்ளார்.
அப்போது, ரவுடியான என்னையே மிரட்டுகிறாயா எனக்கேட்டு காளிதாசை, ரவுடி மணிகண்டன் சரமாரி தாக்கியுள்ளார். இதில், உயிருக்கு பயந்து தப்பியோடிய காளிதாசை, ரவுடி மணிகண்டன் ஓட ஓட விரட்டி கத்தியால் சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு, தப்பினார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஜெ.ஜெ.நகர் போலீசார், காளிதாசின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், ஜெ.ஜெ.நகரில் பிரபல ரவுடியாக மணிகண்டன் வலம் வந்தததும், இவர் ஏற்கனவே 2 காவலர்களை கத்தியால் வெட்டிய வழக்கில் கைது செய்யப்பட்டவர் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து, கோயம்பேடு பகுதியில் பதுங்கி இருந்த மணிகண்டனை நேற்று கைது செய்து, புழல் சிறையில் அடைத்தனர்.