திருவனந்தபுரம்: பாலேரி மாணிக்கம் என்ற படத்தின் படப்பிடிப்பின் போது டைரக்டர் ரஞ்சித் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக பிரபல மேற்குவங்க நடிகையான ஸ்ரீலேகா மித்ரா கொச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் டைரக்டர் ரஞ்சித் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதனால் அவர் கேரள சினிமா அகாடமி தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
கோழிக்கோட்டை சேர்ந்த ஒரு வாலிபரும் ரஞ்சித் மீது பாலியல் அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டை சுமத்தினார். சினிமா வாய்ப்பு கேட்டு வந்த தன்னை டைரக்டர் ரஞ்சித் பெங்களூருவிலுள்ள ஒரு ஓட்டலுக்கு வரவழைத்து நிர்வாணப்படுத்தி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகவும், தன்னுடைய நிர்வாணப் படங்களை அவர் நடிகை ரேவதிக்கு அனுப்பி வைத்ததாகவும் அந்த வாலிபர் கூறினார். இந்த வாலிபரின் புகார் தொடர்பாக டைரக்டர் ரஞ்சித் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நடிகை ரேவதி ஒரு ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: என்னையும், டைரக்டர் ரஞ்சித்தையும் தொடர்புபடுத்தி வரும் செய்திகள் குறித்து நான் கேள்விப்பட்டேன். ஆனால் அப்படி எந்த போட்டோக்களையும் ரஞ்சித் எனக்கு அனுப்பி வைக்கவில்லை. எனவே இதுதொடர்பாக நான் எந்த கருத்தையும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஒரு டைரக்டர் சிக்கினார்: பிரசித்தி பெற்ற பல விளம்பர படங்கள் மூலம் பிரபலமானவர் ஸ்ரீகுமார் மேனன். இவர் மலையாளத்தில் மோகன்லால் நடித்த ஒடியன் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்நிலையில் இவர் மீதும் பாலியல் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. விளம்பர படத்தில் நடிக்க வைப்பதாக கூறி டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் தன்னிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக ஒரு மலையாள இளம் நடிகை இமெயில் மூலம் கொச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து கொச்சி மரடு போலீசார் டைரக்டர் ஸ்ரீகுமார் மேனன் மீது தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.